இந்தியாவை சீண்டும் பிரசந்தா-நேபாள பிரதமர் கண்டனம்
காத்மாண்டு: நேபாள மன்னர் படுகொலை சம்பவங்களை இந்தியாவோடு தொடர்புபடுத்தி மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நேபாள பிரதமர் மாதவ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேபாள மன்னர் பிரேந்திரா கடந்த 2001ம் ஆண்டு அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக பிரேந்திரா உள்பட 8 அரச குடும்பத்தினரை அவரது மகனும் பட்டத்து இளவரசருமான திபேந்திரா கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்த விசாரணையில், திபேந்திரா அரச குடும்பத்தை சாராத பெண்ணை காதலித்ததால் அதிருப்தி அடைந்த மன்னர் அவரை தன் மகன் இல்லை என்று அறிவிப்பதாக இருந்தது. இதனால் ஏற்படட கோபத்தில் தான் திபேந்திரா கொலைகளை செய்ததாக தெரியவந்தது.
இந்நிலையில் மன்னர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக மாவோயிஸ்டு தலைவரும் முன்னாள் பிரதமருமான பிரசந்தா நேற்று முன்தினம் திடீரேன குற்றம்சாட்டி பேசினார்.
'இந்தியாவுக்கு எதிரான நிலையை எடுத்ததன் விளைவாகவே மன்னர் பிரேந்திரா கொல்லப்பட்டார். அதனால் இப்போதைய பிரதமர் மாதவ் குமார் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்' என பிரசந்தா கூறினார்.
மேலும் நேபாளத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி 1993ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதன் பி்ன்னணியிலும் இந்தியா இருப்பதாக பிரசந்தா கூறியிருந்தார்.
சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரசந்தாவின் இந்த பேச்சுக்கு நேபாள பிரதமர் மாதவகுமார் நேபாள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரசந்தா பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவை அல்ல. மிகவும் வருத்தமளிக்கக் கூடியவை என பிரதமர் மாதவ்குமார் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications