'தலைமை நீதிபதியும் தகவல் அறியும் சட்டத்துக்கு உட்பட்டவரே'
டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகம் உள்பட அனைத்து நீதிபதிகளின் அலுவலகங்களும் தகவல் அறியும் சட்டத்துக்கு உட்பட்டவையே என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதனால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் சொத்துக்கள் பட்டியலை வெளியிடுவது கட்டாயமாகிறது.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் கருத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தான் தனது சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டியதில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (ஆனாலும் அவர் தனது சொத்துப் பட்டியலை சில மாதங்களுக்கு முன் தானாகவே முன் வந்து வெளியிட்டுவிட்டார். இருப்பினும் இது கட்டாயமில்லை என்று கூறியிருந்தார்)
மேலும் நீதிபதிகள் நியமனம் பற்றிய விவரங்களையும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறியலாம் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் ஏ.பிஷா, எஸ்.முரளீதர், விக்ரம்ஜீத் சென் ஆகியோர் அடங்கிய டெல்லி உயர் நீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.
தங்கள் உத்தரவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகம் உள்பட அனைத்து நீதிபதிகளின் அலுவலகங்களும் தகவல் அறியும் சட்டத்துக்கு உட்பட்டவையே. இச் சட்டத்தின் கீழ் யாரும் எந்த நீதிபதியின் சொத்து விவரங்களையும் அறியலாம் என்று தீர்ப்பளித்தனர்.
முன்னதாக நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
ஆனால், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட், இந்த உத்தரவை நீதிபதிகள் ஏற்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த உத்தரவைத்தான் இப்போது 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உறுதிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications