For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்-இருண்டது கன்னியாகுமரி-தனுஷ்கோடி!

Google Oneindia Tamil News

Solar Eclipse
சென்னை: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணமான 'கங்கண சூரியகிரகணம்' தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிக நன்றாகத் தெரிந்தது.

இன்று காலை 11.05 மணிக்குத் தொடங்கியது. இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் 1.11 மணிக்கு உச்சத்தை அடைந்தது. அந்த நேரத்தில் கன்னியாகுமரி பகுதியில் சில வினாடிகள் சூரியன் முழுமையாய் மறைந்துவிட முழுமையான இருட்டு பரவி திகிலூட்டியது. பின்னர் சூரியனை மறைத்த நிலவு மெல்ல விலக, வைர மோதிரம் போன்று எட்டிப் பார்த்தது சூரியன். இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியிலும் பகல் இரவானது. இந்த கிரகணம் பிற்பகல் 3.15 வரை நீடித்தது.

சூரியனை பூமி சுற்றிவரும் பாதையில் உள்ள தளமும் நிலவு பூமியைச் சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி சாய்ந்துள்ளது. நிலவு பூமியை சுற்றிவரும் பாதை பூமி, சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்த புள்ளிகளில் நிலவு இருக்கும்போது சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் ஏற்படுகின்றன.

இன்று சூரியனை நிலவு மறைக்க பகல் 11.05 மணிக்கு கிரகணம் துவங்கியது. இது ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், இந்தியா, இலங்கை, தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தெரிந்தது.

இது மிக நீண்ட சூரிய கிரகணமாக இருந்ததால் கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 108 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.

தமிழகத்தின் தென் பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, நாகப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவின் சில பகுதிகளிலும் இதை தெளிவாகவும், முழுமையாகவும் காண முடிந்தது. இதி்ல் கன்னியாகுமரி, தனுஷ்கோடியில் ஒட்டுமொத்தமான சூரிய கிரகணம் ஏற்பட்டது.

இதுதவிர திருவனந்தபுரம், நெல்லை, நாகர்கோவில், மதுரை, தஞ்சை, நாகப்பட்டனம் ஆகிய பகுதிகளில் பத்து நிமிடங்கள் வரை காண முடிந்தது.

தமிழகத்தி்ல் இதற்கு முன் கங்கண சூரிய கிரகணம் 1901ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி தமிழ்நாட்டில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து, 108 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தமிழகத்தில் கங்கண சூரிய கிரகணம் தோன்றியுள்ளது.

தமிழகம் தவிர இந்தியாவின் மற்ற பகுதிகளில் கடைசியாக இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம், 1965ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தெரிந்தது.

இன்றைய கிரகணம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடங்கி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை தெரிந்தது.
கடந்த 3,000 ஆண்டுகளில் மிக அதிக நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம் இதுதான் என்கிறார்கள்.

சூரிய கிரகணத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டன. கிரகணம் முடிந்த பிறகு கோவில்கள் திறக்கப்படும். பின்னர், பரிகார பூஜைகள் நடத்திய பிறகு சாமி தரிசனத்துக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அடுத்த கங்கண சூரியகிரகணம் 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நிகழவுள்ளது.

ராக்கெட் அனுப்பி ஆராயும் இஸ்ரோ:

சூரிய கிரகணத்தால் புவி வளி மண்டலத்திலும் இதர வெளியிலும் ஏற்படும் பின் விளைவுகளை ஆராய கிரகணத்துக்கு முன்பும் பின்பும் இஸ்ரோ ராக்கெட்டுகளை அனுப்புகிறது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் கேரளாவின் தும்பா ஏவுதளங்களில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன.

இன்றும் ஒரு ராக்கெட் ஏவப்பட்டது. 17ம் தேதியும் ராக்கெட்டுகள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளன.

ஆர்எச் 560 எனப்படும் இந்த ராக்கெட்டுகள் ஒன்பது மீட்டர் நீளம், 1.5 டன் எடை கொண்டவை. இவை 100 கிலோ எடைகொண்ட உபரணங்களை வளி மண்டல பகுதிக்கு கொண்டு செல்லும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட் பூமியிலிருந்து 500 கி.மீ தொலைவுக்கு உபகரணங்களை கொண்டுபோய் சேர்க்கும்.

கேரளாவின் தும்பா தளத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட் 75 முதல் 120 தொலைவில் உபகரணத்தை கொண்டு சேர்க்கும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X