நாங்கள் விட்டுச் செல்லும் பணிகளை ஸ்டாலின் தொடருவார்: கருணாநிதி

திருவள்ளுவர் திருநாள் விழாவும், தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவும் நேற்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. விழாவுக்கு நிதி அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
முதல்வர் கருணாநிதி விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
திருவள்ளுவர் விருதை ஐராவதம் மகாதேவனும், பெரியார் விருதை நக்கீரன் கோபாலும், அம்பேத்கார் விருதை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனும், அண்ணா விருதை அவ்வை நடராசனும், காமராஜர் விருதை விருதுநகர் ஆர்.சொக்கரும், பாரதியார் விருதை டி.என்.ராமச்சந்திரனும், பாரதிதாசன் விருதை கவிஞர் தமிழ்தாசனும், திரு.வி.க. விருதை அண்ணாமலை என்கிற இமயமு, கி.ஆ.பெ.விசுவநாதம் விருதை தாயம்மாள் அறவாணனு பெற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு விருதுத் தொகை ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கி, தங்கப்பதக்கங்களை அணிவித்தார். முதல்வர் பின்னர் அகரமுதலியின் 28-ம் தொகுதியை வெளியிட்டார்.
சிறந்த நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்க்கும் பரிசுகள், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஆணைகள் ஆகியவற்றை நிதி அமைச்சர் அன்பழகனும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் வழங்கினார்கள்.
விழாவில் முதல்வர் பேசுகையில்,
பல ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய தமிழ்ச் சான்றோர்கள் பலரும் மறைமலையடிகளாருடைய தலைமையிலே கூடி, திருவள்ளுவருடைய ஆண்டு எது என்பதைக் கணித்து, அந்த ஆண்டின் முதல் நாள் தான் தமிழர்களுடைய ஆண்டுக்கு முதல் நாள் என்று நிர்ணயித்து, அதைக் கொண்டாடுவதற்கு தயங்கித் தயங்கி, சட்டம் அனுமதிக்குமா என்றெல்லாம் கேட்டுக்கேட்டு மயங்கி நின்ற நிலையை மாற்றி இன்றைக்கு நிச்சயமாக சட்டம் அனுமதிக்கிறதோ இல்லையோ என்ற நிலை மாறி, அதற்காக சட்டமே இயற்றப்பட்டு விட்டது என்று சட்டத்தை நிறைவேற்றி, கடந்த ஆண்டும், அதற்கு முதல் ஆண்டும் பொங்கல் திருநாள் - தை முதல் நாள் - அதுதான் தமிழர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு நாள் என்பதை உலகிற்கு உணர்த்தி, உவகை கொண்ட நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டு - நாம் இன்றையதினம் அளவிலா மகிழ்ச்சியிலே இங்கே குழுமியிருக்கின்றோம்.
நான் கேட்டுக்கொண்டேன் - தமிழர் திருநாளில் பொங்கல் புது நாளில் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் - ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை, குட்டிகளோடு நம்முடைய தமிழ்ப் பெரியோர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்த் தாய்மார்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாட வேண்டுமென்று!
என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க கூடுமான வரையில் தமிழ்நாட்டிலே உள்ள பெரியோர்களும், தாய்மார்களும், புலவர் பெருமக்களும், அறிஞர் பெருமக்களும், சங்கம் நிறுவியிருப்போரும், தமிழ்க் கழகங்கள் பல கண்டோரும், அத்தனை பேரும் இன்றைக்கு இந்த விழாவை பொங்கல் திருநாளை அதற்கு அடுத்த நாள் நடைபெறுகின்ற திருவள்ளுவர் திருநாளை, தமிழ்ப் புத்தாண்டு நாளை சிறப்புறக் கொண்டாடி மகிழ்ந்துள்ள காட்சியை தொலைக்காட்சிகளில் நான் கண்டுகளித்து உண்மையிலேயே நாம் நம்முடைய வேண்டுகோளை நிறைவேற்றிய தமிழ் மக்களுக்கு என்னுடைய சார்பாக - தமிழக அரசின் சார்பாக - நான் பிறந்து வளர்ந்த இந்த இயக்கத்தின் சார்பாக என்னை ஆளாக்கிய அண்ணாவின் சார்பாக - அண்ணாவை உருவாக்கிய பெரியாரின் சார்பாக - திராவிட இயக்கத்தின் சார்பாக நன்றியறிதலை, மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பெரியாருடைய விருது, என்னுடைய நண்பர் நக்கீரன் கோபால் இன்றைக்குப் பெற்றிருக்கிறார். நக்கீரன் என்றாலே கண்டிப்பானவர் - சிவனுக்கே பயப்படாதவர் - பரமசிவனையே எதிர்த்தவர் - அவரோடு எதிர்த்து வாதாடியவர். எனவே என்ன தான் நான் முதல்-அமைச்சராக இருந்தாலும் இங்கே அவரைப் பாராட்டினாலும், என்னை எதிர்த்தும் கொடி தூக்கக் கூடியவர் நக்கீரன் கோபால். அவர் தூக்குகின்ற கொடி நியாயத்திற்காக தூக்கப்படுகின்ற கொடி என்றால், அந்த கொடிக்கு தலை தாழக் கூடியவன் நான் என்பதை அவர் அறிவார்.
அண்ணா விருது பெற்றிருக்கின்ற அவ்வை நடராஜன் இரண்டே வரிகளில் தன்னுடைய நன்றியுரையை குறள் போல முடித்துக் கொண்டார். அவர் தன்னுடைய தந்தையாரைப் போல இன்னும் புகழ் மலையின் உச்சியிலே கொடி போடக் கூடியவர் என்ற என்னுடைய பாராட்டுகளை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளுங்கட்சியிலே உள்ளவர்கள் தங்கள் உரைகளைப் படிக்கும்போது ஏற்படுகின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற அளவிற்கு எதிர்க்கட்சியிலே அன்றைக்கு இருந்தவர்களிலே ஒருவர் என்னுடைய நண்பர் சொக்கர் ஆவார். இன்றைக்கும் சிலபேர் இருக்கிறார்கள். அவர்கள் படித்துக்கொண்டு வருவதை அவர்களே திரும்பப் படிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அதிலே வருகின்ற பிழைகளை எடுத்துச் சொன்னால் எங்களை அர்ச்சனை செய்கின்றவர்களும் இருக்கின்றார்கள். அதை ஆதரிக்கின்ற கூட்டமும் நாட்டிலே இருக்கின்றது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
பாரதிதாசன் விருதைப் பெற்ற தமிழ்தாசன் இங்கே பேசும்போது அவர் ஏன் விருது பெற்றார் என்பதை விட்டுவிட்டு, கொஞ்சம் விலகிச் சென்று, நீங்கள் ஓய்வு பெறுவதாகச் சொன்னீர்கள், ஓய்வு பெறக் கூடாது என்று எனக்கொரு அன்புக் கட்டளையிட்டு விட்டு, ஜோதிபாசு இன்னமும் அரசியலிலே இருக்கிறார், மண்டேலா அரசியலிலே இருந்தார், பெரியார் அரசியலிலே இல்லாவிட்டாலும் சமுதாயப் பணிகளை ஆற்றினார் என்றெல்லாம் இங்கே சொன்னார்.
அது நான் எங்கே விலகிச் சென்று விடுவேனோ என்ற அச்சத்தில் அவருக்கு ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, பரபரப்பின் காரணமாக வந்த தவறு என்று கருதுகிறேன். ஜோதிபாசு இன்றைக்குக் கூட இருக்கிறார், இல்லை என்று சொல்லவில்லை. அவருக்கு மெத்த உடல் நலிவு என்று செய்திகள் வருகின்றன. அவர் நலம் பெற்று நாட்டுக்குத் தொண்டாற்ற வேண்டுமென்று இந்த நேரத்தில் நான் அவருக்கு வாழ்த்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த ஜோதிபாசு எனக்கு நெருங்கிய நண்பர்.
ஆனால் இப்போது நம்முடைய தமிழ்தாசன் உவமை காட்டியதற்கேற்ப ஜோதிபாசு இருந்தால் நீ தொடர்ந்து இரு என்று சொல்வதற்கு சரியில்லை - மண்டேலா இருந்ததாகச் சொல்கிறார் - மண்டேலா இருபதாண்டுகளுக்கு மேல் சிறையிலே இருந்து, அதன் பிறகு அதிபராக விளங்கி அவரும் ஓய்வு பெற்று விட்டார் என்பதை தமிழ்தாசன் அறியாதவரல்ல.
பெரியார் நல்ல காலம் அரசியலுக்கே வரவில்லை. வந்தவரும் கொஞ்சநாளில் ஒதுங்கி விட்டார், சமுதாயத் தொண்டே ஆற்றினார். ஆகவே தமிழ்தாசன் சொன்ன அந்த உதாரணத்தை நான் எடுத்துக் கொண்டு - அவ்வழியிலே நடக்க நான் விரும்புகிறேன் என்பதை நான் மீண்டும் ஒரு முறை வள்ளுவர் கோட்டத்திலே தமிழ்தாசனின் சொற்பொழிவின் மூலமாகச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
முத்தமிழ்க் காவலர் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன் பேசும்போது அறவாணனின் உதவிகளோடு தானும் தமிழ்த் தொண்டு ஆற்றுவதாகச் சொன்னார். இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாக - இன்றைக்குத் தான் கேள்விப்பட்டோம் - ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருக்கிறார் என்பதை தாயம்மாள் அறவாணன் பேச்சின் மூலமாக நமக்கு கிடைத்த ஒரு பேருண்மை.
இந்த விழாவிலே நான் திருவள்ளுவருடைய நாள் என்கின்ற காரணத்தால் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக நான் சொல்ல விரும்புவது - இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்து நான் இவ்வளவு நேரம் பேச முடியுமா என்ற நிலையில் காலையிலே இருந்தேன். காரணம் நான் என்றும் இல்லாமல் இன்றைக்கு விடியற்காலை ஒரு நான்கு மணி நேரம் தொடர்ந்து எல்லோரும் எழுப்பியும் கூட எழுந்திருக்காமல் தூங்கியிருக்கிறேன்.
நேற்றைய தினம் பொங்கல் நாளில் எனக்கேற்பட்ட நம்முடைய கழகத் தோழர்களுடைய அன்பால், அவர்களுடைய பற்றால், பாசத்தால் எனக்கு ஆயிரக்கணக்கானோர் வழங்கிய வாழ்த்துகளைப் பெறுவதிலே ஏற்பட்ட அலுப்பும், களைப்பும் சேர்ந்து என்னை அறியாமல் தூங்கி - நான்கு மணி நேரம் வீட்டார் எழுப்பியும் எழாமல், அதற்கு பிறகு பகல் 12 மணி அளவில் டாக்டர்கள் வந்து என்னை எழுப்பியிருக்கிறார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், சொல்வதற்கு என்ன காரணம் என்றால், அவ்வளவு சோர்வோடும், அலுப்போடும் தூங்கியெழுந்த பிறகும் கூட, இன்று மாலையிலே பேராசிரியர் விருது பெறுபவர்களுக்கு விருதுகளை வழங்கட்டும், நான் இன்றைக்கு கலந்து கொள்ள இயலாது என்று கூட முதலில் சொல்லியனுப்பினேன்.
ஆனால் விருது பெறுகிறவர்களுக்கு ஏமாற்றம், விழாவிற்கு வரக்கூடியவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படக்கூடாதென்று - பேராசிரியர் வந்து விட்டார் என்றதும், நானும் வந்து விட்டேன். என்ன தைரியம் என்றால், அவர் என்னுடைய கடமையை ஆற்றுவார் - விருது பெற்றவர்களைப் பாராட்டுவார் - விருது பெறுகின்ற முக்கியமான ஒன்பது பேரைத் தவிர மற்றுமுள்ள நூலாசிரியர்கள், பதிப்பகத்தார், தமிழறிஞர்களுக்கெல்லாம் பரிசுகள், விருதுகளை வழங்க பேராசிரியர் எத்தனை பேருக்கு வழங்க முடியும் என்ற போது தான், நான் பரவாயில்லை, என்னால் முடியாவிட்டால் பேராசிரியருக்கும் ஒரு வேளை இயலாவிட்டால் இருக்கவே இருக்கிறார் துணை முதல்வர், அவர் வழங்குவார் என்று - பிறகு எப்படி துணை முதல்வர் என்று பெயர் இருக்க முடியும் - துணையாக இருப்பார் என்பதற்காகத்தான் அந்தத் துணை முதல்வர் இவைகளையெல்லாம் வழங்குவார் என்று சொன்னேன். இப்போதும் நான் வழங்கியது போக மிச்சம் இருப்பதை பேராசிரியர் வழங்கியது போக மிச்சம் இருப்பதை துணை முதல்வர் வழங்கவேண்டும்.
இதை நான் சொல்வதற்கு காரணம் நாங்கள் விட்டுச் செல்கின்ற பணிகளையெல்லாம் அவர் ஆற்ற வேண்டும், அவரும், நீங்களும் தொடர வேண்டும் என்ற அந்த எண்ணத்திலே தான் அதைச் சொல்லுகின்றேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications