எம்.கே.நாராயணன், சிவராஜ் பாட்டீல் உள்பட 8 பேர் ஆளுநர்களாக நியமனம்

நேற்று நள்ளிரவில் புதிய ஆளுநர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது.
இதுவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த எம்.கே.நாராயணன், மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு ஐபி தலைவராக இருந்தவர். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு இவர் ஆளுநராக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டீஸ்கர் மாநில ஆளுநராக இருந்து வந்த நரசிம்மன் ஆந்திர மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தற்போது ஆந்திர ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் சேகர் தத், சட்டீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேச மாநில ஆளுநராக உள்ள பிரபா ராவ், ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஊர்மிளா பென் சிங் ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச்.பரூக் மரைக்காயர், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு தற்போது ஆளுநராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த சங்கரநாராயணன், மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications