பிஜியில் 2 தமிழக தொழிலதிபர்கள் படுகொலை

Subscribe to Oneindia Tamil

Ramakrishnan and Rajamanickam
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் பிஜி தீவில் படுகொலை செய்யப்பட்டு அவர்களது உடல்களை சூட்கேஸில் வைத்து வயல்களில் புதைத்திருந்தனர் கொலையாளிகள்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் ஏ.ராமகிருஷ்ணன் (40). இவரது நண்பர் ராஜமாணிக்கம். இவர் சென்னை முகப்பேரில் வசித்து வந்தார்.

ராமகிருஷ்ணனும், ராஜமாணிக்கமும் (31) சேர்ந்து இரும்புத்தாது மற்றும் ஆயில் ஏற்றுமதி தொழில் நடத்தினார்கள்.

ஓராண்டுக்கு முன்பு ஆஸ்திரேலியா அருகே உள்ள பிஜி தீவுக்கு சென்றனர். பிஜி தீவுகள் நாட்டின் தலைநகர் சுவாவில் தங்கியிருந்து நபூவா பகுதியில் ஏற்றுமதி தொழில் நடத்தி வந்தனர்.

பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்த அவர்களிடம் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவரும் பிஜி தீவுகள் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்று அங்கே வசித்து வருபவருமான ரவி என்பவர் மேனேஜராகப் பணியாற்றினார். பிஜி தீவைச் சேர்ந்த நசீம் என்பவரும் அவருடன் வேலை பார்த்தார்.

பிஜி தீவில் இருந்து ராமகிருஷ்ணன் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் மனைவி விஜயலட்சுமி, மகள் லட்சுமி நிவாசினி, தம்பிகள் லட்சுமி நாராயணன், கணேஷ்ராஜன் ஆகியோருடன் தினமும் டெலிபோனில் பேசுவாராம்.

அதுபோல ராஜமாணிக்கமும் சென்னை முகப்பேரில் வசிக்கும் மனைவி பவானி, மகள் லோகிதாவுடன் (3) பேசுவது வழக்கம். ராஜமாணிக்கத்திற்கு ஒரு வயதில் லோகித் கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளான்.

கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி அவர்கள் இருவரும் டெலிபோனில் குடும்பத்தினருடன் பேசவில்லை.

அதனால் ராமகிருஷ்ணன் செல்போனைத் தொடர்பு கொண்டனர். ஆனால் முடியவில்லை. உடனே, சுவாவில் உள்ள கம்பெனிக்கு தொடர்பு கொண்டு மேனேஜர் ரவியிடம் விசாரித்தார்கள். அதற்கு அவர் சர்வசாதாரணமாக இருவரும் காணாமல் போய்விட்டதாக கூறினார். உடனே அதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கும்படி ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் ரவியிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து டிசம்பர் 17-ந் தேதி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காணாமல் போன தொழிலதிபர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால் பதறிப் போன ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டனர்.

உடனடியாக மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, வயலார் ரவி, மு.க.அழகிரி, ஜி.கே.வாசன் மற்றும் சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., ஆகியோர் பிஜி நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு காணாமல் போன தொழில் அதிபர்கள் ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம் ஆகியோரை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். இந்திய தூதரக அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள்.

இந்த நிலையில், லட்சுமி நாராயணன் பிஜி விரைந்தார். மேனேஜர் ரவியிடம் விசாரித்தபோது,, முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். தனது அண்ணனையும், பங்குதாரரான ராஜமாணிக்கத்தையும் கண்டுபிடிப்பதில் ரவி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

குழப்பமும், வேதனையும் அடைந்த லட்சுமி நாராயணன் பிஜி தீவில் உள்ள தமிழர்களின் துணையோடு இந்திய தூதரகம் சென்று முறையிட்டார். இருந்த போதிலும் காணாமல் போனவர்களைப் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதனால் ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம் ஆகியோரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது.

இந்த நிலையில், நபூவா என்ற இடத்தில் ஒருவர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கினார். காய்கறி பயிரிடுவதற்காக அந்த நிலத்தை உழவுப் பணி நடந்துள்ளது. அப்போது நிலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது.

துர்நாற்றம் அடித்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது இரண்டு சூட்கேஸ்களில் சடலங்களை வைத்து புதைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூட்கேஸ்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

அதில் இருந்த இரு உடல்களுமே ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல் தெரிந்ததும் ராமகிருஷ்ணனின் தம்பி லட்சுமி நாராயணன் கதறி அழுதார்.

இதுபற்றி சென்னையில் ராமகிருஷ்ணனின் தம்பி கணேஷ்ராஜனும், அவர்களது நெருங்கிய உறவினரும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான பாலதண்டாயுதபாணி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ராமகிருஷ்ணன் மற்றும் ராஜமாணிக்கத்தின் இழப்பு எங்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகும். இவர்களது படுகொலை தொடர்பாக அவர்களிடம் மேனேஜர்களாக பணிபுரிந்த ரவி, நசீம் ஆகியோரை நபூவா பகுதி போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள்தான் ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம் ஆகியோரை கடத்தி பணம் கேட்டு மிரட்டி, பணம் கிடைக்காததால் படுகொலை செய்துள்ளனர் என்றும் பல லட்சம் ரூபாயையும் கொள்ளை அடித்துள்ளார்கள் என்றும் சந்தேகிக்கிறோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவியை 100-க்கு நூறு சதவீதம் நம்பி ஏமாந்துவிட்டனர். இந்திய வெளியுறவுத் துறை விரைந்து செயல்பட்டிருந்தால் அவர்கள் இருவரையும் காப்பாற்றி இருக்கலாம். அல்லது அவர்களது சடலம் அழுகிப் போவதற்கு முன்னதாகவே கைப்பற்றி இருக்கலாம்.

இரண்டு சடலங்களும் மிகவும் அழுகிப் போயிருப்பதால் இந்தியாவிற்கு எடுத்து செல்ல முடியாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனால் அங்கேயே அடக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்றனர்.

கொலை ஏன்...?

ராமகிருஷ்ணனும், ராஜமாணிக்கமும் பொங்கலுக்கு சென்னை வந்து குடும்பத்தினருடன் கொண்டாட முடிவு செய்தனர். 2 மாத விடுமுறையில் செல்வதால் பிஜியில் உள்ள கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களுக்கு மேலாளர் ரவியை பவர் ஆப் அட்டர்னியாக நியமித்தனர்.

பெருமளவிலான சொத்துக்கள் பவர் ஆப் அட்டர்னி மூலமாக கைக்கு வந்ததால் அவற்றை அபகரிக்கத் திட்டமிட்டார் ரவி.

கடந்த 15ம் தேதி ரவி தொழில் அதிபர்கள் இருவரையும் தனது நண்பர் நதீம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இரும்புக் கம்பியால் தாக்கி இருவரையும் கொலை செய்தனர்.

பின்னர் உடலை தலைநகர் சுவாவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள நதீம் பண்ணையில் குழி தோண்டி புதைத்தனர். பின்னர் கோடிக்கணக்கான பணத்தை தங்களது பெயருக்கு மாற்றியுள்ளனர்.

உறவினர்கள் விசாரித்தால் இருவரும் புயலில் சிக்கி மாயமாகிவிட்டதாக சொல்லலாம் என்று நினைத்தார் ரவி. ஆனால் ராமகிருஷ்ணனின் லேப்டாப்பை பயன்படுத்தி ரவி, உறவினர்களிடம் பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது.

ரவியிடம் போலீசார் விசாரித்தபோது உண்மை வெளிவந்தது. இதையடுத்து அவரும், நதீமும் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக் கொலையில், பிஜி போலீஸ்காரர் மாத்யூ, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனாப், அஜய் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த மூன்று பேரும் தலைமறைவாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+