4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா... ஏராளமான நகைகள்- பணம் சிக்கின!

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே இவரும், இன்னும் சில நடிகர்களும் சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வீடுகளில் திடீர் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது.
நடிகர்கள் சூர்யா, வடிவேலு, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
சென்னை வருமான வரித்துறை இயக்குனர் கே. கே.திரிபாதி தலைமையில் 90 அதிகாரிகள் 25 குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கே அதிரடியாக சென்று சோதனையைத் தொடங்கினார்கள்.
நடிகர் சூர்யாவுக்கு தி.நகரில் 2 வீடுகளும், அடையாறில் ஒரு வீடும் உள்ளது. 3 வீட்டிலும் ஒரே நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் நுழைந்தனர்.
வடிவேலுக்கு வளசரவாக்கத்தில் வீடும் அதன் அருகே அலுவலகமும் உள்ளது. மதுரை விரகனூரிலும் அவருக்கு வீடு உள்ளது. இந்த 3 இடங்களிலும் ஒரே நேரத்தில் ரெய்டு நடந்தது.
இதே போல டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் சைதாப்பேட்டை வீட்டிலும், முருகதாசின் விருகம்பாக்கம் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் நுழைந்தனர்.
வீட்டில் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது. போனில் பேசக் கூடாது என்று கட்டளையிட்ட அதிகாரிகள் உடனடியாக சோதனையை தொடங்கினார்கள்.
முதலில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் எண்களை குறித்துக்கொண்ட அவர்கள் பின்னர் வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனையிட்டனர். பீரோ, லாக்கர்கள் போன்றவற்றை வீட்டில் உள்ளவர்களை வைத்தே திறக்க வைத்து சோதனையிட்டனர்.
ரகசிய இடங்களில் முக்கிய ஆவணம் மற்றும் பொருட்களை மறைத்து வைத்து உள்ளார்களா? என்பதை கண்டறிய தங்களுக்கே உரிய டெக்னிக்குகளையும் கையாண்டனர்.
ஏராளமாய் பணம், கிலோ கணக்கில் நகைகள்..
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது. அப்போது 4 பேர் வீட்டில் இருந்தும் ஏராளமான நகைகள், பணம், சொத்து ஆவணங்கள், பங்கு பத்திரங்கள் போன்றவை சிக்கின.
சூர்யாவின் தி.நகர் வீட்டில் கிலோ கணக்கில் நகைகள் கிடைத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.
கைப்பற்றப்பட்ட நகை- பணம் மற்றும் ஆவணங்கள் பட்டியலை நடிகர்களிடம் காட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். பின்னர் அவை அனைத்தும் வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கணக்கில் வராத சில பெரிய சொத்துக்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
நடிகர் மற்றும் இயக்குநர்கள் வீட்டில் சிக்கியது கறுப்பு பணமா? என்று அதிகாரிகளிடம் கேட்டபோது,
"இதுபற்றி இன்னும் இரு தினங்களில் அறிக்கை தருவோம். எங்களிடம் அவர்கள் கொடுத்துள்ள வருமான விவரங்களை இனிமேல்தான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்", என்றனர்.
இந்த சோதனை குறித்து, சூர்யா வீட்டுக்கு சென்று வந்த வருமான வரித்துறை உயரதிகாரி கூறுகையில், "இப்போது சோதனை நடத்தப்பட்ட நடிகர்கள் அனைவருமே கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் சரியாக வருமான வரி கணக்கை காட்டவில்லை. அவர்களிடம் ஏராளமான கறுப்பு பணம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே தான் 4 பேர் வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தி உள்ளோம்.
எதிர்பார்த்தபடியே 4 பேர் வீடுகளிலும் ஏராளமான நகை-பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கின.
சோதனை நடத்திய அதிகாரிகள் பலர் போதிய அனுபவம் இல்லாதவர்கள். எனவே அங்கு கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும், அலுவலகத்துக்கு கொண்டு வந்து, அவர்கள் ஏற்கனவே காட்டி இருக்கும் கணக்கோடு ஒப்பிட்டு பார்க்க உள்ளோம். இந்த பணிகள் முடிந்த பிறகு அவர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட கறுப்பு பணம், கணக்கில் வராத சொத்துக்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவோம்.
இதில் முக்கியமானது, இந்த 4 பேர் வீட்டிலுமே எங்கள் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சில இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது...", என்றனர்.
வடிவேலுவிடம் 4 மணிநேரம் விசாரணை...
வடிவேலுவின் விருகம்பாக்கம் வீட்டில் சோதனை நடந்தபோது வடிவேலு வீட்டில்தான் இருந்தார். அவரிடம் வருமான வரி அதிகாரிகள் 4 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
சூர்யாவின் தி.நகர் வீட் டில் அவரது தம்பி கார்த்தி தொடர்புடைய சொத்துக்களும் இருந்தன. சோதனை நடந்த போது கார்த்தி மதுரையில் இருந்தார். வருமான வரி சோதனை நடப்பதை அறிந்ததும் அவர் சென்னை வரவழைக்கப்பட்டார்.
சென்னையில் நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்த அதே நேரத்தில் புதுச்சேரியில் சினிமா பைனான்சியர் 2 பேர் வீடுகளிலும் சோதனை நடத்தி உள்ளனர்.
ஜேபிஜே நில மோசடியில் சிக்கிக் கொண்டுள்ள நடிகர் விஜயகுமார் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது.
கலக்கத்தில் நடிகர்-நடிகைகள் ..
இன்று 2-வது நாளாக சோதனை நடக்கும் என்று அதிகாரிகள் அறிவித்து இருப்பதால் வேறு சில நடிகர் வீடுகளிலும் சோதனை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பட்டியலில் தனுஷ் உள்ளிட்டோர் பெயரை கிசுகிசுக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நடிகர்-நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications