தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: இளங்கோவன்
ஈரோடு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால், அமைதி இல்லை என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், முதல்வர் கருணாநிதி ஆந்திராவை பின்பற்றி மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும், கான்கிரீட் வீடு திட்டத்தையும், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தவதாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.
ஆனால் இத்திட்டத்தின் பயன் மக்களுக்கு முழுமையாகச் சேர, தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும். துளிர்விடும் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், என் இல்லம் ஆகியவை மீது தொடர் தாக்குதல்கள் நடந்தன. கடைசியாக, தாராபுரத்தில் முன்னாள் எம்.பி. கார்வேந்தன் இல்லம் தாக்கப்பட்டு, வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கும், எனக்கும் தீவிரவாத ஆதரவு இயக்கத்தால், தொடர்ந்து மிரட்டல் கடிதமும், மொட்டை கடிதமும் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் வீடு தாக்கப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் புதிதாக தோன்றியுள்ள தீவிரவாதம், வன்முறையை தடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால், அமைதி இல்லை.
சில தீவிரவாத இயக்கத்தினர் மக்கள் இடத்தையே வேலி போட்டு, அவர்களிடம் பணம் கேட்கின்றனர். அப்பாவி மக்கள் வன்முறையாளர்களாலும், தீவிரவாதிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி பற்றி இப்போது அறிவித்து இருப்பது காலம் கடந்த ஞானோதயம் ஆகும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவும், கருணாநிதியும் முடிவு செய்வர். முதல்வர் கருணாநிதி விமர்சனத்துக்கு உட்பட்டவர் என்றபோதும் அவர் செயல்பாடு நன்றாக உள்ளதால், அவருக்கு ஓய்வு தேவையில்லை.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமையும் நேரத்துக்காக காத்திருக்கிறோம். கொங்கு நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறுவது அபத்தமானது. இது தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications