சபரிமலை-இந்தாண்டு வருமானம் ரூ.126 கோடி
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் கடந்த 17ம் தேதி வரையிலான வருமானம் சுமார் ரூ.126 கோடியை எட்டியுள்ளது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் மகர விளக்கு பூஜை திருவிழாவின் கடைசி நெய்யபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அய்யப்ப சுவாமிக்கு தேவசம் சார்பில் களபாபிஷேகம் நடந்தது.
மகரவிளக்கு பூஜை திருவிழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும், இரவில் சிறப்புவாய்ந்த படி பூஜை மற்றும் அத்தாழ பூஜையும் நடந்தது.
அதன்பின் 9.50 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. நேற்றும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மகரவிளக்கு திருவிழா நிறைவடைந்த நிலையில், இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனமும், உஷ பூஜையும் நடந்தது.
காலை 7 மணிக்கு பந்தளம் அரண்மனை பிரதிநிதி ராஜா பூரட்டாதி திருநாள் வேணுகோபால வர்மா, சுவாமி தரிசனம் செயதபின் அய்யப்ப சுவாமிக்கு பஸ்மாபிஷேகம் செய்யப் பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது.
இனி, மாசி மாத பூஜைகளுக்காக வருகிற பிப்ரவரி 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 17ம் தேதி வரை ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது.
மண்டல, மகர விளக்கு காலத்தில் கடந்த 17ம் தேதி வரை கோயிலின் மொத்த வருமானம் ரூ.125.94 கோடியாகும். இது கடந்த வருடம் இதே நாளில் ரூ.109.94 கோடியாக இருந்தது.
இவ்வருடம் மண்டல காலத்தில் மொத்த வருமானம் ரூ.84.57 கோடி, கடந்த வருடம் ரூ.72.63 கோடி. இந்த ஆண்டு மகர விளக்கு காலத்தில் ஜனவரி 17ம் தேதி வரை ரூ.41.37 கோடி வருமானம் வந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.37.31 கோடியாக இருந்தது.
மகர விளக்கு பூஜைக்கு முந்தைய நாள் மிக அதிக அளவில் உண்டியல் வருமானம் வந்துள்ளது. அன்று ஒரே நாளில் ரூ.3.41 கோடி வருமானம் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications