வீடில்லாதோருக்கு தங்கும் வசதி- டெல்லி அரசுக்கு சுப்ரிம் கோர்ட் உத்தரவு

டெல்லியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு ஒருபுறமிருக்க, கடும் பனியை சமாளிக்க முடியாமல் முதியோர் உள்ளிட்டவர்கள் பலியாகும் சம்பவங்களும் நடக்கின்றன.
குறிப்பாக ஏழைகள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்கள் பனிக்கு பலியாவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் குடியிருக்க வீடில்லாதவர்கள் சுமார் 2 லட்சம் பேர் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இவர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சுமார் 17 கொட்டகைகளை அமைத்துள்ளது.
ஒரு கொட்டகையில் 3 ஆயிரம் பேருக்கு மேல் தங்க முடியாது. இதனால் ஏராளமான மக்கள் வீதிகளில், சந்துபொந்துகளில் படுத்து இரவை கழிக்கின்றனர்.
இவர்களில் முதுமையில் இருக்கும் சிலர் இரவு நேர கடுங்குளிருக்கு பலியாக நேரிடுகிறது.
ஜாண்டிவாலன், நிஜாமுதீன், கால்காஜி, ஜாமாமஸ்ஜித், ஃபவின்டெய்ன் சௌக், ஜமுனா பஜார் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடின்றி இரவு நேரத்தில் தவித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மக்கள் உரிமைக்கான பொதுநல அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து பொது நல மனு தாக்கல் செய்தது.
அதில், வீடில்லாத ஏழைகள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டோர், நோயாளிகள் போன்றவர்களுக்கு தேவையான தங்குமிட வசதி செய்து தர டெல்லி அரசு தவறிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பெஞ்ச், தற்போது பனி கடுமையாக பொழிந்து வரும் நிலையை கருத்தில் கொண்டு வீடில்லாத மக்களுக்கு தேவையான தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது.
பனிக்காலங்களில் பெரும்பாலான உயிரிழப்புகள் நோய் தொற்று மற்றும் உணவு கோளாறால் ஏற்படுவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு கிடைப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க இன்றைய தினமே பிற்பகல் 2 மணிக்குள்ளாக டெல்லியின் உணவு மற்றும் பொதுவினியோகத் துறை செயலாளர் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications