நளினி 'விடுதலை'-கருத்து தெரிவிக்க காங். மறுப்பு
டெல்லி: நளினி விடுதலை என்பது சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. தற்போது இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே கருத்துக் கூற முடியும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சிறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் கழித்து விட்டதால் தன்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் நளினி.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிதாக ஒரு சிறை ஆலோசனை குழுவை அமைத்து நளினியின் மனுவைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஒரு சிறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் வேலூர் சிறைக்குச் சென்று நளினி உள்ளிட்டவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். இதையடுத்து தனது அறிக்கையை இன்னும் ஓரிரு நாளில் அரசிடம் தரப் போவதாக அவர் கூறியுள்ளார்.
நன்னடத்தை, பெண் குழந்தை இருப்பது, கணவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆகிய காரணங்களால் நளினி விடுதலை செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது. அந்த ரீதியில்தான் ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு அரசுக்குப் பரிந்துரைக்கவுள்ளதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. அதுவரை இதுகுறித்து கருத்துக் கூற முடியாது என்று கூறி விட்டார்.
அதேசமயம், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், இது தவறான செய்தியாக மாறி விடும். தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர் நளினி என்பதை யாரும் மறந்து விடக் கூடாது, மறக்க முடியாது என்றார்.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கருத்து தெரிவிக்கையில், இது சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரம். இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவி்ப்பும் வெளியாகவில்லை. அப்படி வெளியான பிறகே இதுகுறித்து கருத்து கூற முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications