ஆஸி-இனவெறி தாக்குதலை தடுக்க 'மரியாதை அமைச்சர்'!

ஆஸ்திரேலியாவில் குறிப்பாக விக்டோரியா மாகாண தலைநகர் மெல்போர்ன் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீதான, குறி்ப்பாக மாணவர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் 100க்கும் மேல் தாண்டியுள்ளது.
இனவெறி காரணமாக இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், நள்ளிரவு நேரத்தில் வேலை முடிந்து கையில் பணத்துடன் செல்லும் நபர்களிடம் நடக்கும் வழிப்பறிச் சம்பவங்கள் தான் இவை என ஆஸ்திரேலியா தரப்பில் கூறப்பட்டு வந்தது.
எனினும் இந்த விளக்கத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. தாக்குதல் சம்பவங்களை தடுக்க ஆஸ்திரேலியா உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான விவகாரங்களை கவனிக்க தனி அமைச்சகத்தை விக்டோரியா மாகாண அரசு புதிதாக அமைத்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் 'மரியாதை அமைச்சர்' என்ற புதிய பொறுப்பை உருவாக்கி, முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஜஸ்டின் மேடன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்டோரியாவில் வாழும் இந்தியர்களின் கல்வி, சட்டம் ஒழுங்கு மற்றும் அவர்கள் தொடர்புடைய இதர விவகாரங்களை ஜஸ்டின் மேடன் கவனிப்பார் என விக்டோரியா மாகாண பிரதமர் ஜான் பிரம்பி அறிவித்துள்ளார்.
கேபினெட்டில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் ஜஸ்டின், திட்டங்கள் துறையை ஏற்றுள்ளார். தற்போது கூடுதலாக இந்த 'மரியாதை திட்ட' பொறுப்பையும் கவனிப்பார் என பிரதமர் கூறினார்.
மேலும் 2 இந்தியர்கள் தாக்கப்பட்டனர்:
இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று ஒரு டாக்சி டிரைவர் உள்பட இரண்டு இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
பிரிஸ்பேனின் தெற்கில் உள்ள மெக்ரகார் என்ற இடத்தில் தனது வீட்டுக்கு அருகே ஒரு 25 வயது இந்தியரை, போன் பாக்ஸால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். அவரிடமிருந்த பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
தாக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்கியது ஒரு நபர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் போல அவர் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு சம்பவத்தில் இந்திய டாக்சி டிரைவர் ஒருவர் பிரிஸ்பேனின் தென் கிழக்கில் உள்ள கரின்டேல் பகுதியில் இன்று அதிகாலையில் தாக்கப்பட்டுள்ளார்.
அவருக்கும், இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இரண்டு பேரும் சேர்ந்து இந்தியரைத் தாக்கியுள்ளனர்.
இதில் இந்தியரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கார் கண்ணாடிகளையும் அந்த இரு நபர்களும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications