சாதிய உணர்வை அகற்றுங்கள்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சாதிய உணர்வை நாம் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் முழுவதுமாக நம் உள்ளங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தாம்பரம் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜாவின் மகள் பவித்ரா- சித்தார்த்தன் திருமணம் அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

ராஜாவைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். முதலில் அவர் எனக்கு சாதாரண கட்சிக்காரர் என்ற முறையில் அறிமுகமானார். ஒருமுறை ரயிலில் பயணம் செய்தபோது அவர் தன்னைப் பற்றியும், தான் ஆற்றிய தொண்டு, கட்சி பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார். அவரது பேச்சையும் செயல் திறத்தையும் அறிந்து கொண்ட நான் அவருக்கு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கொடுக்க நினைத்தேன். அதன்படி சட்டசபை உறுப்பினர் ஆகியிருக்கிறார்.

அவரது பகுதி பிரச்சனைகள் எல்லாவற்றை அவரே தீர்த்து வைத்து விடுகிறார் என்று கூறினார்கள். அமைச்சர்கள், அதிகாரிகளை தொந்தரவு செய்து தொகுதிக்கு வேண்டியதை செய்கிறார் என்று குறிப்பிட்டார்கள். அவரிடம் வராத பிரச்சனைகளே இல்லை. ஒருவேளை பிரச்சனைகளே வராவிட்டால் அவரே பிரச்சனையாகி, அதைத் தீர்த்து வைப்பதற்கு நான் அரும்பாடுபட்டிருக்கிறேன் (சிரிக்கிறார்).

இந்த இனிய திருமண விழாவில் நான் என்னுடைய இதயமார்ந்த வாழ்த்துகளை மணமக்களுக்கு அளித்து, வாழ்த்துகின்ற அதே நேரத்தில் ஒரு சிறிய நெருடல். நம்முடைய போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு அவர்கள் இங்கே வாழ்த்தும்போது நீங்கள் எல்லாம் யார் என்று சொல்லி, அவர் யாரென்பதைக் காட்டிக் கொண்டார்.

ஓமந்தூரார் வரலாற்றைப் பற்றி அடை மொழியும் சேர்த்து சொல்லி (தனது சமூகத்தை நேரு மறைமுகமாகக் குறிப்பிட்டதை சொல்கிறார்) பாராட்டினார்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சுதந்திர இந்தியாவில் தோன்றிய முதல் மாநில அரசாகிய தமிழ்நாட்டிற்கு முதல்வராக இருந்தார்.

அவர் காங்கிரஸ்காரராக இருந்தாலும் பெரியார் விரும்பும் வழியில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்காக அரும்பாடு பட்டார். அவரை காங்கிரஸ்காரர்கள் மறந்து விட்டனர். என்றாலும் நான் மறக்கவில்லை. அரசினர் தோட்டத்துக்கு ஓமந்தூரார் பெயர் வைத்து எனது அஞ்சலியை செலுத்தினேன்.

ஏனென்றால் திராவிட இயக்கம் மதவாதம் அற்ற, சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதிலும், பிற்படுத்தப்பட்டிருக்கின்ற சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டிருக்கின்ற சமுதாயங்களை முன்னேற்றுவதிலும் அக்கறை கொண்ட இயக்கம். சாதி- பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடும் இயக்கம்.

அதற்கு நாங்கள் மாத்திரமல்ல, சமூக நீதிக்கு சோதனை வந்தபோது பெருந்தலைவர் காமராஜர் உள்பட பல்வேறு தலைவர்கள் போர்க் குரல் கொடுத்து, அதை காப்பாற்றி இருக்கிறார்கள்.

அப்படி சமூகநீதியை சட்டப்பூர்வமாகக் காப்பாற்றியவர்களிலே ஒருவர் என்ற முறையில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை 'தாடி வைக்காத பெரியார்' என்று குறிப்பிடுவார்கள்.

திராவிட இயக்க கொள்கைகளை கொண்ட அவர் தேசிய இயக்கத்தில் இருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடி புகழ் பெற்றவர்.

அதைத்தான் தம்பி நேரு அவர்கள் இங்கே குறிப்பிட்டார். குறிப்பிட்டதோடு நிற்க வேண்டும். பொதுவாக சாதிய உணர்வை நாம் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் முழுவதுமாக நம்முடைய உள்ளங்களில் இருந்து அகற்ற வேண்டும். சாதிய உணர்வு இருந்தால் அது சமூக ஒற்றுமையை, சமூகத்தினுடைய முன்னேற்றத்தை ஏதோ ஒரு வகையில் தடுத்துவிடும்.

அதனால்தான் சொல்லுகின்றேன். சாதிய உணர்வு கூடாது. நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம் என்றால் நான் அங்கிருக்கிற பத்து பேரைப் பார்த்து, 'நீங்கள் இன்ன சாதி என்று என்னால் கூறமுடியாது. எல்லோரும் மனிதர்களாகத்தான் தெரிகிறோம்.

இன்னும் சொல்ல வேண்டுமானால், எல்லோரும் திராவிடர்களாகத்தான் இருக்கிறோம். எல்லோரும் தமிழர்களாகத்தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட மண்டபத்திலே தமிழர்களாக அமர்ந்திருக்கிறோம். தமிழ் சாதியாக அமர்ந்திருக்கிறோம்.

இந்த விழா முடிந்து நீங்கள் பத்து பத்து பேராக, ஐந்து ஐந்து பேராக, நான்கு நான்கு பேராக வெளியே செல்லுகின்ற நேரத்தில் ஒவ்வொருவரும், அப்படிச் செல்லுகின்றவர்கள் தமிழன், என்பதை மறந்துவிட்டு, நாம் இன்ன சாதி என்று சாதி சாதியாக வெளியேறுகின்றோம்.

ஆகவே, ஒரு கூட்டத்திலே எப்படி தமிழர்களாக மதிக்கப்படுகிறோமோ, அதைப்போல நாட்டிலும் தமிழ்ச் சாதியாக, தமிழ் இனமாக நாம் மதிக்கப்பட வேண்டும். அத்தகைய உணர்வை நாம் பெற வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+