சோனியாவுக்கு எதிரான வழக்கு-மனுதாரருக்கு அபராதம்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எம்.பி பதவியில் இருந்து நீக்கக்கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெல்ஜியம் நாட்டு அரசு கடந்த 2006ம் ஆண்டில், சோனியா காந்திக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் லியோபோல்டு பட்டத்தையும், கெளரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது.
இந்திய எம்.பி என்ற முறையில் இந்த விருதுகளை பெற்று சோனியா காந்தி விதிகளை மீறி விட்டதாகவும், அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் ராஜன் ஆகியோர் சோனியாவுக்கு எதிரான இந்த மனுக்களை தாக்கல் செய்தனர். இருவரின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதன் பின்னர் ராஜன் சார்பில் மீண்டும் இதே விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்புகார் குறித்து சோனியாவிடம் விசாரணை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜனின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,
'இந்த மனுதாரர் ஏற்கனவே தள்ளுபடி செய்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் கிளறி, நீதிமன்றத்தின் நேரத்தையும், பணத்தையும் வீணடித்துள்ளார். எனவே ராஜனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications