ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி - வேப்ப மரத்தில் தாலி கட்டிய பெண்கள்
நெல்லை: தை மாதம் அமாவாசை அன்று பிறந்ததால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை மாவட்டத்தில் வதந்தி பரவியதால் அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் கணவர் ஆயுள் பெற வேண்டி மனைவிகள் தாலி கயிறு கட்டி வேண்டினர்.
வதந்திகள் பலவிதம், ஓவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல ஆண்களுக்கு ஆபத்து என தினம் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க வீட்டு வாசல் முன் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது போல பல வதந்திகள் தொடர்ந்து வந்தன. எப்போதும் ஆண்களுக்கு மட்டுமே ஆபத்து என்ற ரீதியில் பரவி வரும் வதந்தி வரிசையில் தற்போது புதிதாக ஒரு வதந்தி பெண்கள் மத்தியில் பரவியுள்ளது.
தமிழர் திருநாளான தை ஓன்றாம் தேதி அமாவாசை அன்று பிறந்ததால் ஆண்களுக்கு ஆபத்து. இதனால் திருமணமான பெண்கள் அம்மன் கோயிலில் உள்ள வேப்ப மரத்தில் தாலி கட்டினால் ஆண்களுக்கு ஆயுல் கூடும் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
இதனால் நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள திருமணமான பெண்கள் அந்தந்த ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் தாலிகடடி வேண்டினர்.
பாளை மனக்காவலம்பிள்ளை நகர் ஜோதிடர் தெருவில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் நேற்று காலை திரண்டனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பெண்கள் அங்குள்ள வேப்பமரத்தில் குலவையிட்டு மஞ்சள் கயிறால் தாலிகட்டினர். கணவர் ஆயுள்பெற வேண்டி வேப்ப மரத்தை சுற்றி வந்தனர். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications