ஜெ. ஸ்டைலி்ல் கேப்டன்!-பரங்கிமலையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னை அருகே உள்ள பரங்கிமலை கண்டோண்மென்ட் நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வருகிற 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
வழக்கமாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் தினமும் தனது கட்சியினர் மூலம் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பிரச்சனையை முன் வைத்து போராட்டம் அறிவிப்பார். அதிமுகவினரும் கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்துவர். பத்திரிக்கை போட்டோகிராபர்கள், தொலைக்காட்சி வீடியோகிராபர்கள் அதை படம் பிடித்தவுடன் கலைந்து சென்றுவிடுவர். அந்தப் பிரச்சனையையும் அத்தோடு விட்டுவிடுவர்.
ஆனால், இப்படி போராட்டங்கள் எதுவுமே நடத்தாமல் தேர்தலின்போது மட்டும் மைக் பிடித்து திமுக, அதிமுகவை திட்டிவிட்டு, கூட்டணி அமைப்பதையும் விமர்சித்துவிட்டு, நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிவிட்டு, அடுத்த தேர்தல் வரை வெறும் அறிக்கைகள் மட்டுமே விடுவது விஜய்காந்த்தின் ஸ்டைலாக இருந்தது.
இந் நிலையில் சமீபத்தில் இரு தேர்தல்களில் டெபாசிட்டே போய்விட்டதால் கூட்டணி அமைப்பேன் என அறிவித்த விஜய்காந்த், இப்போது அதிமுக ஸ்டைலின் உள்ளூர் பிரச்சனைக்காக தனது கட்சியினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சீபுரம் மாவட்டம் பரங்கிமலை கண்டோண்மென்ட் பகுதியில், போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி, குடிநீர், சாலைகள், கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்துதல், பாதாள சாக்கடைத்திட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவைபோன்ற குறைகளை பலமுறை நீக்கக்கோரியும் கண்டோண்மென்ட் நிர்வாகம் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கண்டோண்மென்ட் போர்டில் இடம்பெற்றிருந்தும் அதிகாரம் இல்லாதவர்களாக உள்ளனர்.
அனைத்து அதிகாரங்களும் இந்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்பொழுது உள்ள போர்டானாலும், தலைமை நிர்வாக அதிகாரியானாலும் அனைத்து நடவடிக்கைகளும் இந்த அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் 2003-ம் ஆண்டு கண்டோண்மென்டுகளுக்கான சட்டம் வந்தபொழுது, பாதுகாப்பு நிலைக்குழுவின் சார்பில் இந்த அமைப்பு ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும் என்று பரிந்துரைகள் செய்யப்பட்டன.
தலைமை நிர்வாக அதிகாரி போர்டு சொல்படித்தான் செயல்பட வேண்டும் என்றும் அவர் போர்டில் இடம்பெறக் கூடாது என்றும், போர்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்றும், போர்டு தலைவர் மேயரைப்போல மக்கள் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பொழுது கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
பொதுவாக மக்களின் குறைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எளிதில் உணர்ந்து தீர்க்க முடியும். மேலும் சரிவர அவர்கள் செயல்படாவிட்டால் மக்கள் அவர்களை தேர்தல்களில் தோற்கடித்து நீக்க முடியும். இந்த வாய்ப்பு அதிகார வர்க்கம் ஆட்சியில் இருக்கின்ற பொழுது மக்களுக்கு கிடைக்காது. மக்களின் உணர்வுகளைப் பற்றி அதிகாரிகளும் கவலைப்பட வேண்டியது இல்லை.
இதனாலேயே பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை ஜனநாயக முறை செயல்படுத்தப்படுகிறது. ஆனால், நேர்மாறாக கண்டோண்மென்ட் பகுதியில் மட்டும் தேர்தல்கள் சடங்குகளாக நடத்தப்படுகின்றனவே தவிர, அவர்களுக்கு ஒரு முனிசிபாலிட்டியில் உள்ள அதிகாரங்கள் கூட இல்லை. இந்தியா முழுவதும் ஜனநாயக சோலை என்றிருந்தாலும் கண்டோண்மென்டுகள் மட்டும் ராணுவ ஆட்சி என்ற பாலைவனமாகவே உள்ளது.
இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைக்குழுவே பரிந்துரை செய்தும் இந்திய அரசு இதை ஏற்கவில்லை. இதை தவிர்த்துவிட்டு இந்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இன்று அதிகாரமில்லாத பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து விட்டு, அதிகாரிகளையும் கேட்டு தங்கள் குறைகளை தீர்க்க முடியாத அவலநிலையில் கண்டோண்மென்ட் மக்கள் உள்ளனர்.
இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தே.மு.தி.க. வருகின்ற 27-1-2010 புதன்கிழமை அன்று கண்டோண்மென்ட் அலுவலகத்தின் முன்பு காலை 11 மணிக்கு மாவட்ட செயலாளர் அனகை.முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications