மேற்கு வங்க ஆளுநராக எம்.கே.நாராயணன் பதவியேற்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநராக எம்.கே.நாராயணன் பதவியேற்றுக் கொண்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த நாராயணனுக்கு அந்தப் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் நாராயணனை ஆளுநராக ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இருப்பினும் ஆளுநர் நியமனத்தில் மாற்றம் செய்வதில்லை என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது.
இந்த நிலையில் நேற்று நாராயணன், ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், கல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ்.ஷா, நாராயணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் நாராயணன் பேசுகையில், நான் ஒரு அரசு ஊழியர். ஆனால் ஆளுநர் பதவி எனக்கு அளிக்கப்பட்டது வியப்பை அளித்தது. இருப்பினும் இந்த உயர் பதவியை ஏற்றுக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இது எனது வாழ்க்கையின் உச்சகட்டமாகும்.
குடியரசுத் தலைவலும், பிரதமரும் என்னை நம்பி அளித்துள்ள இந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
76 வயதாகும் மாயன்கோட்டை கேலத்து நாராயணன் என்ற இயற்பெயருடைய நாராயணன், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். கோபால கிருஷ்ண காந்தியின் ஓய்வைத் தொடர்ந்து அவர் மேற்கு வங்க மாநில ஆளுநராகியுள்ளார்.
1987ம் ஆண்டு முதல் 90 வரை ஐபி தலைவராக இருந்தார் நாராயணன். பின்னர் கூட்டு உளவுப் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்தார்.
பின்னர் 1991ல் மீண்டும் ஐபி தலைவரானார். 1992ல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை போரில் நாராயணனின் ஆலோசனைகள் பெருமளவில் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications