Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொள்கை உறுதி இருந்தால் திமுகவை அழிக்க முடியாது - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து தலைமுறை, தலை முறையாக இந்த இயக்கத்தைக் கட்டிக் காக்கின்ற இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருமே கொள்கையில் உறுதிப்பாட்டோடு இருக்க வேண்டும், அப்படி இருந்தால் யாரும் நம்மை அழித்து விட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அன்பகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,

ஒரு நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு மீண்டும் வந்துள்ள நீங்கள் தாய்க்கழகமான திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மீண்டும் உங்களுடைய ஆதரவை நல்கி, அதன் அரவணைப்பை பெற்று, திராவிட இயக்கத்தை மென்மேலும் தழைத்திடச்செய்ய, செழித்திடச்செய்ய, வலுப்படுத்திட செய்ய இன்றைக்கு இங்கே கூடியிருக்கிறீர்கள்.

நம்முடைய என்.கே.கே.பெரியசாமி, அவருடைய நீண்ட கால அரசியல் பொது வாழ்வை தொடர்ந்து இப்போது மேலும் ஒரு முறை பொறுப்பு ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

எந்த நேரத்திலும் வயது வித்தியாசம் பாராமல் நிலைமைகளை பற்றி கவலைப்படாமல் அண்ணாவிற்குப்பிறகு நான் சொன்னால் அதை "வேத'' வாக்காக கருதி செயல்படக்கூடிய கழகத்தின் வேங்கைப்புலி என்.கே.கே.பெரியசாமி என்பதை நான் இந்த நேரத்திலே நினைவு கூர்ந்து அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

எதையும் தாங்கக்கூடிய உள்ளம் வேண்டுமென்று அண்ணா சொன்னார்கள். நிகழ்ந்துள்ள பல சம்பவங்களை தாங்கிக் கொண்டு என்.கே.கே.பெரியசாமி இயக்கம் தான் பெரிது என்று இந்த இயக்கத்தை நடத்தி கொண்டிருப்பதும்-உழைக்க முன் வந்திருப்பதும் நாம் பெற்ற பேறு என்று தான் சொல்ல வேண்டும்.

உங்களை எல்லாம் இங்கே காணக்கூடிய நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. தமிழகத்தில் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய போது நமது இனப்பற்று பரவிட வேண்டும், உறுதிப்பட வேண்டும் என்ற அந்த கருத்தை 1949-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் வடசென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக தொடக்க விழாவிலே குறிப்பிட்டார்கள். ஆனால் அவர்கள் வளர்த்து விட்ட இந்த இயக்கம் எந்த அளவிற்கு வலுப்பெற்றது என்பதையும், ஆட்சிப்பொறுப்பு ஏற்கின்ற அளவிற்கு வலிமை பெற்றது என்பதையும் நீங்கள் தொடர்ந்து உணர்ந்து அறிந்து வருகின்ற ஒன்றேயாகும்.

இதற்கிடையில் எத்தனையோ புயல்கள் எல்லாம் அடித்தும்கூட இந்த கழகத்தை எதுவும் சாய்த்து விடவில்லை, எதுவும் அழித்து விடவில்லை, அசைக்கவும் இல்லை. என்ன காரணம் என்றால் நாம் கொண்டுள்ள கொள்கை உறுதி தான் அதற்கு காரணம். வேறு எந்த செல்வாக்கும் அல்ல. நம்மிடம் இருந்த கொள்கை உறுதி தான் அதற்கு காரணம். அந்த உறுதி உங்களிடம் எல்லாம் இருக்கின்ற காரணத்தால்தான் அதற்கு மாறாக காரியங்கள் நடைபெறுகின்ற இடத்திலிருந்து செயல்பட விரும்பாமல் ஒத்த கருத்தோடு செயல்பட கூடிய தாய்க்கழகத்தில் நாம் இணைந்திட வேண்டுமென்று-தாயின் மடிக்கு இன்றைக்கு வந்திருக்கிறீர்கள்.

எண்ணிப்பாருங்கள் - நீங்கள் வந்திருக்கின்ற இடம் - உங்களை எல்லாம் அழைத்து அரவணைத்துள்ள இந்த இடம் அன்பகம். அந்த அன்பகத்தை அறிஞர் அண்ணா திறந்து வைத்தார், நான் அப்போது பொருளாளர். இந்த அன்பகத்தை இன்றைக்கு பழுது பார்த்து புதுப்பித்து நீங்கள் எல்லாம் பார்த்து மகிழத்தக்க அளவிற்கு வசீகரப்படுத்தி நீங்கள் எல்லாம் வந்து அமரக்கூடிய இடமாக ஆக்கியிருப்பவர் இன்றைய கழக பொருளாளர் நம்முடைய தம்பி ஸ்டாலின் அவர்கள்.

இதில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து தலைமுறை, தலை முறையாக இந்த இயக்கத்தைக் கட்டிக் காக்கின்ற இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருமே கொள்கையில் உறுதிப்பாட்டோடு இருக்க வேண்டும், அப்படி இருந்தால் யாரும் நம்மை அழித்து விட முடியாது.

நம்மை நோக்கி வீசிய புயல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. எத்தனையோ சோதனைகளுக்கெல்லாம் ஆட்பட்டிருக்கிறோம். சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் நாம் கொள்கையிலே கொண்டுள்ள அந்தப்பற்று, பாசம், உறுதி தான்.

அதே எண்ணத்தோடு தொடர்ந்து இந்த கழகத்தில் உங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் பணியாற்றுவீர்களேயானால் நான் இப்போது என்.கே.கே.பெரியசாமியை எப்படி பாராட்டினேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், அதைப்போன்ற பாராட்டுகளை நீங்கள் எதிர்காலத்திலே திராவிட இயக்கத்திலே பெறுவதற்கு உங்களைத் தயார்படுத்தி கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

எத்தனையோ சூழ்ச்சிகள் - எத்தனையோ மாய்மாலங்கள் - எத்தனையோ மயக்கு வேலைகள் இவைகள் எல்லாம் இந்த இயக்கத்திற்கு எதிராக நடைபெற்ற போதிலும் அதிலிருந்து மீண்டு இந்தக் கழகத்தை நேர்வழியில் நெறிப்படுத்தி கொண்டு செல்கிற இந்த பாங்கினை அண்ணாவிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கின்ற நாம் தொடர்ந்து அதை பின்பற்றி -நம்மிடையே ஏதாவது மாச்சரியங்கள் இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கொள்கைகளுக்காக நாம் வாழ்கிறோம்.

அந்த கொள்கைகளை காப்பாற்றுவோம் என்ற உணர்வோடு நாமெல்லாம் திராவிடர்கள், திராவிட இயக்கத்தை உருவாக்கி - திராவிட இனம் என்றால் திராவிட என்ற அந்த சொல்லையே கற்பித்து, அதற்குரிய இலக்கணத்தை தெரிவித்து நம்மையெல்லாம் ஆளாக்கி விட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்களின் எண்ணங்கள் நிறைவேற தொடர்ந்து நாம் ஒத்துழைக்க வேண்டும், உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் தான் திராவிட முன்னேற்ற கழகத்திலே உங்களை இணைத்துக்கொண்டதற்கு பொருள் என்று உங்களுக்கெல்லாம் தெரிவித்து நீங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஓரிடத்தில் இருந்தாலும் கூட, இன்றைக்கு மீண்டும் எங்களோடு இணைகிறீர்கள் - நாங்கள் உங்களோடு இணைகிறோம்.

இந்த இணைப்பு, இந்த பிணைப்பு உறுதியானதாக என்றென்றும் நிலை பெற்றுள்ளதாக மாற வேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை - அப்படி ஒத்துழைத்தால் தான் இந்த நாட்டில் நாம் நிறைவேற்ற வேண்டிய மேலும் பல கோரிக்கைகள் இருக்கின்றன. இப்போது நிறைவேறியிருக்கின்ற கோரிக்கைகள் கொஞ்சம் தான்.

மற்றவைகள் எல்லாம் நிறைவேறுவதற்கு-சமுதாயத்தின் பெயரால்-அரசியலின் பெயரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கு உங்களுடைய ஒற்றுமை தேவை-வந்திருக்கிறீர்கள்-வரவேற்கிறேன், இரு கையேந்தி உங்களையெல்லாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+