அதிபர் தேர்தல்: ஓட்டுப் போட முடியாத பொன்சேகா-சொந்த ஊரிலும் தோல்வி
கொழும்பு: மகிந்த ராஜபக்சேவிடம் தனது சொந்த ஊரிலேயே தோல்வியைத் தழுவியுள்ளார் பொன்சேகா.
பொன்சேகாவின் சொந்த ஊர் அம்பலங்கோடா. இங்கு ராஜபக்சே, பொன்சேகாவை விட பெருமளவிலான வாக்குகளைப் பெற்று பொன்சேகாவை தோற்கடித்துள்ளார்.
இங்கு தபால் ஓட்டுக்கள் மற்றும் வாக்குப் பதிவின்போது பதிவான வாக்குகளில் ராஜபக்சவே அதிகம் பெற்றார்.
ஓட்டே போடாத பொன்சேகா...
முன்னதாக, நேற்றைய தேர்தலில் பொன்சேகா ஓட்டே போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் அட்டை தனக்கு வழங்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், பொன்சேகா வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர் வெற்றி பெற்றால் அதிபராகப் பதவியேற்பதில் எந்த சிக்கலும் வராது என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, பொன்சேகாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிட்டது சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி ராஜக்சே தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடரவுள்ளனராம்.
ராணுவத்தின் முற்றுகையில் பொன்சேகா...
இந்த நிலையில் ராஜபக்சே வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதைத் தொடர்ந்து பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கியுள்ள சின்னமான் லேக்சைட் ஹோட்டலைச் சுற்றிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்சேகாவைக் கைது செய்யும் திட்டத்துடன் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா மறுத்துள்ளார். அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.
பத்திரிக்கை அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு...
இதேபோல பல்வேறு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளதால் அவற்றுக்கும் ராணுவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாணயக்காரா கூறுகையில், மீடியா அலுவலகங்களுக்கு சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனவே அனைத்து மீடியா அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications