ஆஸ்திரேலியா: பணியிடத்திலும் இனவெறி!

ஆஸ்திரேலியாவில், குறிப்பாக மெல்போர்ன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி விட்டது.
இரவு நேரங்களில் ரொக்கப்பணத்துடன் செல்லும் இந்திய மாணவர்களிடம் வழிப்பறி நடப்பதாகவும், அவை இனவெறி தாக்குதல் அல்ல என்றும் ஆஸ்திரேலியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பணியாளர்களும் மேலதிகாரிகளின் இனவெறிக்கு ஆளாகி இருப்பதாகவும், குறிப்பாக அரசு சார்ந்த பணிகளில் இந்தியர்கள் பணி புரிவதை ஆஸ்திரேலியர்கள் விரும்புவதில்லை' என்று தகவல் வெளியாகி உள்ளது.
'ஒன்இந்தியா.காம்' செய்திப் பிரிவுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து பெயர் தெரிவிக்க விரும்பாத இந்தியர் ஒருவர் அனுப்பியுள்ள இ-மெயில் கடிதத்தில் இதுபற்றி கூறியிருப்பதாவது:
பாதுகாப்பு காரணங்களுக்காக என்னுடைய பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.
ஆஸ்திரேலியாவில் அரசு சார்ந்த பணிகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் என்ன மாதிரி பிரச்னைகளை எல்லாம் எதிர்கொள்கிறார்கள் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை கூறுகிறேன்.
மெல்போர்னில் இருந்து 100 கி.மீ தொலைவில் பல்லாரட் என்ற இடத்தில் அரசு ஏஜென்சிக்காக நான் வேலை பார்க்கிறேன்.
அலுவலகத்தில் பணிபுரியும் போது என்னுடைய 'கரியர்'ரில் ஒவ்வொரும் நிலையை கடக்கும் போதும் நான் இனவெறி அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்கொள்கிறேன்.
பழுத்த அனுபவம், நல்ல திறமை இருந்தாலும் அதற்குரிய அங்கீகாரத்தை நாம் எதிர்பார்த்தால் கிடைக்காது. திறமைக்கான அங்கீகாரம் கிடைப்பதில் இன பாகுபாடு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகிறது.
வெள்ளையின மக்களால் நிரம்பியுள்ள அரசாங்கம் தொடர்பான அலுவலகங்களில் இந்தியரோ அல்லது ஆசியரோ 4 முதல் 6 மாதங்களுக்கு மேல் தாக்குபிடித்து இருக்க முடியாது.
ஆனால் நான் பல்லை கடித்துக்கொண்டு 6 ஆண்டுகள் வரை வேலை பார்த்து வருகிறேன். இதுவரை என்னுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம், மரியாதை கிடைக்கவில்லை.
இனப்பாகுபாடு தான் இதற்கு காரணம். இதன் பாதிப்பு எனது 'கரியர்', தனிப்பட்ட வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் குடும்பத்திலும் பிரதிபலிக்கிறது.
சமீபத்தில் அனுபவத்தாலும், திறமையாலும் எனக்கு வரவேண்டிய பதவி, சர்ச்சைக்குரிய வகையில் ஆஸ்திரேலியருக்கு போய் விட்டது.
1500 பேர் கொண்ட எனது கம்பெனியில் நான் ஒருவன் தான் இந்தியன். விக்டோரியாவில் 8 ஆயிரம் பேர் வரை இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
நான் எப்படி அப்பதவிக்கு தகுதியற்றவன் ஆனேன் என்ற மன உளைச்சல் வெகுவாக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் மனம் நொந்து இப்போது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டேன். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் ஒயிட்காலர் இனவெறியையும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications