கல்விக் கடன் பெறுவதில் தமிழகம் முதலிடம்: ப.சிதம்பரம்
கோவை: காமராஜர் 50 ஆண்டுகளுக்கு முன்பு வித்திட்ட இலவசக் கல்வி என்ற விதை தற்போது விருட்சமாகி, கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் வரும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
கோவையை அடுத்த வெள்ளலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் சிலை திறப்பு விழா மற்றும் ராஜிவ்பவன் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் காமராஜர் சிலையை திறந்துவைத்து பேசுகையில், 'காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவு திட்டத்தால் தற்போது நாடுமுழுவதும் 12 கோடி குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
அதேபோல் இலவச கல்வி வழங்கும் வகையில் இலவச பாட புத்தகங்கள், சீருடை வழங்கியதிலும் காமராஜர் ஆட்சி தான் முன்னோடியாக இருந்தது.
கடந்த 2008-09ம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.5 ஆயிரத்து 16 கோடி கல்விக்கடன் தரப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் அதிகமாக கல்விக்கடன் வழங்கி உள்ளோம்.
அதற்கு காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காமராஜர் வித்திட்ட இலவசக்கல்வி என்ற விதை. அது தற்போது விருட்சமாக வளர்ந்திருக்கிறது.
இந்திய அளவில் கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முதல் இடத்தை பெற்று உள்ளது.
அதேபோல் 93ம் ஆண்டில் மத்திய அரசு இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் கடந்த 1950ம் ஆண்டு காலகட்டத்திலேயே தமிழகத்தில் காமராஜர் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார்.
அவர் ஆட்சி காலத்தில் இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசன சட்டத்தை திருத்தும்படி நேருவிடம் வற்புறுத்தினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்கமுடியாது என்று சட்டத் திருத்தம் கொண்டுவந்தார்.
அவ்வாறு திருத்தம் கொண்டுவராமல் இருந்தால் இன்று கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கிடைத்து இருக்காது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்றவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தது.
இப்போது உயர்கல்வியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்ற நிலை வந்துள்ளது. இடஒதுக்கீடு சட்டம் வந்தபோதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.
பெரியார், காமராஜர் ஆகியோர் தான் இடஒதுக்கீட்டின் தந்தைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சமுதாய புரட்சிக்கு வித்திட்ட அம்பேத்கார், பெரியார், அண்ணா வழியில் காமராஜரும் புரட்சியாளர் ஆவார்.
தமிழகத்தில் 9 ஆண்டுகாலம் ஊழலற்ற, வன்முறை, அடக்குமுறை இல்லாத ஆட்சி நடத்தினார். அவருக்கு நாம் எத்தனை காலம் வேண்டுமானாலும் நன்றிக்கடன் பட்டிருக்கவேண்டும்' என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications