சானியா மிர்ஸாவின் திருமண நிச்சயதார்த்தம் திடீர் ரத்து

இதுகுறித்த தகவலை சானியா மிர்ஸாவே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால் திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்டோம். சொராப் தனது வாழ்க்கையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் சானியா
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. சமீபத்தில் கூட கல்யாணத்திற்குப் பிறகு டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று சானியா கூறியிருந்தார்.
இந்த நிலையில் திடீரென நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை இரு தரப்புமே தெரிவிக்கவில்லை.
சானியாவின் குடும்பமும், சொராப்பின் குடும்பமும் நீண்ட கால நட்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சானியா மிர்ஸா ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடுவதற்காக மெல்போர்ன் சென்றுள்ளார். அந்தப் போட்டியில் தோல்வியுற்ற நிலையில் நாளை அவர் மலேசியா செல்கிறார். அங்கு பெட் கோப்பை போட்டியின் ஆசியா ஓசியானியா 2வது பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்று ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டு வர வேண்டியது சானியாவின் பொறுப்பு- தந்தை:
இந்த நிச்சயதார்த்த முறிவால் நிச்சயம் சானியாவுக்கும், சொராப்புக்கும் மன அழுத்தம் ஏற்படத்தான் செய்யும். அதிலிருந்து மீண்டு வர வேண்டியது அவர்களின் கடமை என்று கூறியுள்ளார் சானியாவின் தந்தை இம்ரான்.
சானியா - சொராப் நிச்சயதார்த்த முறிவு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார் இம்ரான்.
அப்போது அவர் கூறுகையில், இது இரு தரப்பும் சேர்ந்து எடுத்த சுமூகமான முடிவுதான். இது இருவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் எந்த வகையிலும் பாதிக்காது.
இரு தரப்புமே நீண்ட காலமாக நட்பு பாராட்டி வரும் குடும்பங்கள் என்பதால், இந்த முடிவை எடுப்பதில் எந்த சிக்கலும் எழவில்லை. அனைத்தும் நல்லபடியாக முடிந்தது.
சானியா தொடர்ந்து விளையாடுவார். அவர் விளையாடுவதற்கும், நிச்சயதார்த்த முறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தொடர்ந்து விளையாடுவார் என்றார்.
நிச்சயதார்த்த முறிவால் சானியாவின் விளையாட்டு பாதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நிச்சயம் பாதிக்கும். மன அழுத்தமும் ஏற்படும். ஆனால் அதிலிருந்து மீண்டு வர வேண்டியது அவரது கடமை. நிச்சயம் அவர் மீண்டு விடுவார் என்று நம்புகிறேன். அதேபோலத்தான் சொராப்பும். அவரும் இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும் என்றார் இம்ரான்.












Click it and Unblock the Notifications