தெலுங்கானா கமிட்டி: அடுத்த வாரம் அமைப்பு-ப.சிதம்பரம்

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது அவர் கூறுகையில்,
கமிட்டி அமைக்கும் பணிகளை முடிவு செய்யப் போகிறோம். கிட்டத்தட்ட அது முடிவுக்கு வந்துள்ளது. அனைத்தும் நன்றாகப் போனால், இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்திற்குள் கமிட்டி அமைக்கப்பட்டு விடும்.
கமிட்டியில் இடம் பெறப் போவோர் குறித்து இப்போதே கூற முடியாது. பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் நிச்சயம் கமிட்டி அமைக்கப்பட்டு விடும்.
இந்தக் கமிட்டியின் முக்கியப் பணி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை பரிந்துரைப்பதுதான்.
பாக்.குக்கு எச்சரிக்கை...
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத் உள்ளிட்டோரை மும்பை தாக்குதல் வழக்கில் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யாதவரை, அந்த நாடு மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது என்ற முடிவுக்குத்தான் இந்தியா வர நேரிடும்.
சயீத்துக்கு எதிராக இந்தியா ஒரு ஆதாரத்தையும் தரவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது விசித்திரமாக உள்ளது. அதேபோல ஜாகியுர் ரஹ்மான் போன்ற மேலும் பலர் குறித்த ஆதாரங்களையும் நாம் பாகிஸ்தானிடம் அளித்துள்ளோம்.
மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது நமக்குத் தெரியும், பாகிஸ்தானுக்கும் தெரியும்.
அவர்களையெல்லாம் அவர்கள் விசாரணைக்குக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு இதில் அக்கறை இல்லை, நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற முடிவுக்குத்தான் நாம் வர வேண்டியிருக்கும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications