முலாயம் சிங்கால் கைவிடப்பட்ட அமர்சிங்-மாயாவதிக்கு திடீர் 'ஜால்ரா'!

முலாயம் சிங்கின் ஜிப்பா போல அவருடனேயே எப்போதும் இருந்தவர் அமர் சிங். முலாயமுக்கு தலைவர் அமரா அல்லது அமருக்குத் தலைவர் முலாயமா என்று சந்தேகம வரும் அளவுக்கு எப்போதும் முந்திரிக் கொட்டை போல தன்னை முன்னிருத்திக் கொண்டவர் அமர்.
பிற கட்சிகளுடன் பேரம் பேசவும், டெல்லியில் பாலிடிக்ஸ் செய்யவுமே அமரை முலாயம் பயன்படுத்தி வந்தாலும் கூட தான் சொல்லித்தான் எதையும் முலாயம் செய்வார் என்பது போல சீன் காட்டி வந்தார் அமர்சிங்.
இந்த நிலையில் சமீபத்தில் அமருக்கு எதிராக சமாஜ்வாடிக் கட்சியினர் திரளவே ஜகா வாங்கி கட்சியை விட்டு விலகிக் கொண்டார் அமர். அவருடன் அன்புத் தம்பி சஞ்சய் தத்தும் விலகினார். அமரின் நட்பு வட்டாரத்திற்குள் இருக்கும் ஜெயா பச்சனும், அமரின் தோழியான ஜெயப்பிரதாவும் கூட விலகுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆனால் விலக மாட்டேன் என்று ஜெயா கூறி விட்டார். ஜெயப்பிரதா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் உ.பி. முதல்வரும், முலாயமின் பரம வைரிகளில் ஒருவருமான மாயாவதியை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார் அமர். கூடவே முலாயமையும் விளாசித் தள்ளியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் முலாயம் சிங் யாதவுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால் என்னை மிகப் பெரிய அரசியல் எதிரியாக பார்த்து வந்தார் மாயாவதி. நானும், மாயாவதியின் பாதிப்பிலிருந்து முலாயமை கண்ணை இமை காப்பது போல காத்து வந்தேன்.
இப்போது நான் முலாயமை காத்து வந்த பாதுகாப்பு வலையத்தை விலக்கிக் கொண்டு விட்டேன். தாங்கள்தான் முலாயம் சிங்கின் காவலர்கள் என்று கூறிக் கொள்வோர் தங்களது விசுவாசத்தைக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
நான் கட்சியிலிருந்து விலகிய பின்னர் மாயாவதியை இதுவரை சந்திக்கவில்லை. மேலும், மாயாவதி குறித்த எனது கருத்துக்களும் கூட இன்னும் மாறவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மிகுந்த மன வேதனையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மாயாவதிக்கு முலாயம் சிங் யாதவும், முலாயமுக்கு மாயாவதியும் ஆதரவாக இருந்த நேரம் அது. முலாயம் சிங் யாதவ் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை மாயாவதி விலக்கியதால் அப்போது முலாயமின் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த முலாயமும், முலாயமின் வாரிசுகளும், குடும்பத்தினரும், லக்னோ அரசினர் விருந்தினர் இல்லத்திற்குச் சென்று அங்கு தங்கியிருந்த மாயாவதியை மிகவும் இழிவாகப் பேசி அவமானப்படுத்தினர்.
அது இந்திய அரசியலில் மிகவும் மோசமான தருணம். அன்று மாயாவதி சந்தித்ததை இன்று நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த 14 வருடங்களாக எனது தலைவர் எதைச் செய்தாலும், எந்த முடிவை எடுத்தாலும், அதை தட்டாமல், சரியென்று சொல்லி, கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்த குற்றத்திற்காக, துணை நின்ற குற்றத்திற்காக இன்று என்னை அவமானப்படுத்துகின்றனர்.
நம்மை விட்டால் இவன் எங்கு போவேன் என்று என்னைப் பற்றி அவர்கள் நினைத்து விட்டார்கள். இது அவர்களது தவறு.
நாம் இவரை (தன்னை) மிகவும் மோசமாக பயன்படுத்திக் கொண்டோம். காங்கிரஸுக்கு எதிராக இவரை விட்டே கடுமையாக விமர்சிக்க வைத்தோம். இப்போது காங்கிரஸ் இவரை நிச்சயம் ஏற்காது. வேறு எங்கு போவார்.
அத்வானியுடனும் இவரை மோத வைத்து விட்டோம். எனவே பாஜகவும் ஏற்காது. மாயாவதிக்கு எதிராகவும் இவை கொம்பு சீவி விட்டோம். எனவே மாயாவும் ஏற்க மாட்டார்.
வீட்டு நாய் வேறு எங்கு போக முடியும், இங்குதானே திரும்பி வந்தாக வேண்டும் என்பது அவர்களது எண்ணம். ஆனால் மாற்று வழி தெரியாத ஆள் இல்லை நான்.
எதிர்காலத்தில் நான் சோனியாவுடன் சேருவேனா அல்லது மாயாவதியுடன் சேருவேனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இருவரும் தத்தமது பாதையில் தனித்துவத்துடன் போய்க் கொண்டிருக்கும் பெரிய அரசியல் தலைவர்கள். ஒருவர் உ.பியில் தன்னை நிரூபித்துள்ளார். அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி தன்னை நிரூபித்தவர் அவர். இன்னொருவர் தேசிய அளவில் தனக்கு விடப்பட்ட சவால்களை முறியடித்து வென்றவர்.
இவ்வளவுதான் இப்போது என்னால் சொல்ல முடியும் என்றார் அமர்சிங்.
அமர் பேசுவதைப் பார்த்தால் காங்கிரஸ் கிடைத்தால் அதில் சேருவது அல்லது பகுஜன் கிடைத்தால் அதில் சேருவது என்ற நிலைப்பாட்டில் இருப்பது போலத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications