அசோக்நகர் ஆடிட்டர் மனைவி கொலைகாரன் சிக்கினான்

அசோக்நகர் 18வது அவென்யூ, 92வது தெருவில் உள்ள சாய்பிரசாந்த் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆடிட்டர் சுப்பிரமணியின் மனைவி கலா (42) சில வாரங்களுக்கு முன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் உடற்பயிற்சி கூடத்தைச் சேர்ந்த ஒரு பயிற்சியாளர், கலாவின் தோழி ஆகியோர் இடையிலான கள்ளத் தொடர்புக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்தனர். ஆனால், அதற்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து கலாவின் உறவினர்கள், வீட்டுக்கு வந்து செல்பவர்கள், அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் கலா கொலையான அன்று முதல் அவரது மகன் தியாகராஜனின் செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால், அந்த செல்போன் இயக்கத்தில் இருந்தது. ஆனால், அதைத் தொடர்பு கொண்டால் எதிர்முனையில் யாரும் எடுக்கவில்லை. இதையடுத்து அதை கொலைகாரன் எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
இதையடு்த்து அந்த செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து அதன் சிக்னலை டிராக் செய்து கொலையாளியை போலீசார் மடக்கியுள்ளனர்.
அந்தக் கொலையாளியின் பெயர் ஆனந்த் (32). தேனாம்பேட்டை ஆலயம் தெரு வீட்டுவசதி வாரிய குடியிருபில் வசிக்கும் இவன் திருமணமானவன். இவனுக்கு மனைவி, 4 வயது குழந்தை உள்ளனர்.
கார்பெண்டரான இவன் முன்பு கலாவின் வீட்டுக்கு வேலைக்கு சென்றிருக்கிறான். வீட்டில் சில வாரங்கள் கப்போர்ட் அமைக்கும் பணியை செய்ததால் கலாவோடு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கலாவை பார்க்க அவ்வப்போது வீட்டுக்கு சென்றுள்ளான்.
அப்போது கலாவிடம் இருந்த பணம், நகைகளால் தூண்டப்பட்டு அவரைக் கொலை செய்ய திட்டம் போட்டுள்ளான். அவன தந்துள்ள வாக்குமூலம்:
தச்சு தொழிலில் சம்பாதித்து சொந்தமாக ஆட்டோ வாங்கினேன். ஆனால், சீட்டாட்டம், குதிரை பந்தயத்தில் பணம் கட்டி எனது செல்வத்தை இழந்தேன். லட்சக்கணக்கில் கடனாளியாகி விட்டேன். கடனை அடைக்க எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வெறி உண்டானது.
இந்த நேரத்தில்தான் கலாவின் வீட்டில் 2 முறை மரவேலை செய்யச் சென்றேன். அவர் ஜிம்முக்கு செல்லும்போது நகைகளை எல்லாம் கழற்றி வைத்துவிட்டுச் செல்வார்.
சம்பவத்தன்று அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குள் போனதும், நானும் பின்னால் சென்று கதவை தட்டினேன். கதவை திறந்த கலா எனக்கு டீ போட சமையல் அறைக்கு சென்றார்.
அப்போது கலா கழற்றி வைத்துள்ள நகைகளைத் தேடினேன். கலாவுக்கு தெரியாமல் நகைகளை கொள்ளையடித்துவிட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் கலா திடீரென்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்து, என்ன தேடுகிறாய் என்று சத்தம் போட்டார்.
மேலும் வீட்டை விட்டு வெளியே போகுமாறு சத்தம் போட ஆரம்பித்தார்.
இதையடுத்து நான் கொண்டு சென்ற கத்தியைக் காட்டி மிரட்டினேன். ஆனால், அவர் என்னை பிடிக்க முயற்சித்தார். இதையடுத்து கத்தியால் குத்தினேன். கத்தி சிறியதாக இருந்ததால் அதன் பிடி உடைந்துவிட்டது. இருந்தாலும் தொடர்ந்து அவரை குத்தினேன். சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார்.
இதையடுத்து பீரோவில் இருந்து ரூ.25,000, கலா அணிந்திருந்த தாலி சங்கிலி, வளையல், கம்மல், மூக்குத்தி ஆகிய நகைகளை கழற்றினேன். மற்ற நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறி விட்டேன் என்று கூறியுள்ளான் ஆனந்த்.












Click it and Unblock the Notifications