புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டு வசித்தால் பட்டா!
சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்கு இலவச பட்டா அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவோருக்கு, அவர்களுடைய ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் இந்த அரசினால் 2006-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது.
பின்னர் இத்திட்டத்தில், காலவரையறை 10 ஆண்டுகள் என்பது 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன், இத்திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான உச்சவரம்பும் முற்றிலும் நீக்கப்பட்டது.
இதன் பயனாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் 6 லட்சத்து 99 ஆயிரத்து 917 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் மேலும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வீட்டுமனைப்பட்டா பெற்று பயன்பெறும் வகையில், "குறைந்த பட்ச குடியிருப்பு கால வரம்பு மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படும்'' என 6.1.2010 அன்று சட்டப் பேரவையில் நிகழ்ந்த கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, அரசு நிலங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருப்போர் ஐந்தாண்டுகளாவது குடியிருந்திருக்க வேண்டும் என்பதை மூன்று ஆண்டுகள் குடியிருந்தால் போதும் என்று மேலும் குறைத்து முதல்வர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார்.
முதல்வர் பிறப்பித்துள்ள இந்த ஆணையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வீட்டு மனைப் பட்டா பெறும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications