நானும் அழகிரியும் இரட்டை குழல் துப்பாக்கி-ஸ்டாலின்

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு இன்று 59வது பிறந்த நாளாகும். இதையொட்டி மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு, அழகிரி குறித்து அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தக வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி தலைமை தாங்கினார். ஸ்டாலின் கலந்து கொண்டு அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசுகையில்,
பிறந்த தினம் கொண்டாடும் திமுகவின் தென் மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சரும், என்னுடைய அன்பு அண்ணனுமான மு.க.அழகிரி பற்றி ரத்தினவேல் எழுதிய அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் உங்களோடு கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு வாழ்த்திப் பேசி பிறந்த நாள் வாழ்த்தை முன்கூட்டியே கூறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆண்டு அண்ணன் மு.க.அழகிரியின் பிறந்த தின விழா ஒரு பொதுக்கூட்டமாக அல்லாமல் மாநாடு போன்று நடைபெற்றது. அந்த விழாவில் நான் ஒன்றை குறிப்பிட்டுக் கூறினேன்.
"நானும் அண்ணன் மு.க.அழகிரியும் திமுகவுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியை போல் இருப்போம்'' என்ற கருத்தை சொன்னேன். அதே கருத்தை உறுதியாக இப்போதும் சொல்கிறேன்.
அண்ணன் அழகிரி இன்னும் பல சிறப்புகளைப் பெற்று திமுகவுக்கும் சமுதாயத்திற்கும் குறிப்பாக முதல்வர் கருணாநிதிக்கு வலு சேர்க்கின்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.க.அழகிரி அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும், அவரை விட வயதில் குறைந்த அவருடைய தம்பியாக இருந்தாலும், திமுகவின் சார்பாகவும், இளைஞர் அணி சார்பாகவும் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் என்றார் ஸ்டாலின்.
2011ல் அதிமுகவே இருக்காது-அழகிரி:
விழாவில் அழகிரி பேசுகையில், என்னையும், என் குணாதிசயங்கள், நினைவாற்றல், அரசியல் நிகழ்வுகள் பற்றி 15 நாள்களில் நூலாக எழுதிய ரத்தினவேலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைகளுக்கு உதவிடத்தான் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன். வெறும் அழகிரியாக இருந்தால், அதிகாரிகள் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். ஆனால், மத்திய அமைச்சராக இருந்தால் நான் சொன்னால் கேட்பார்கள்.
1962ம் ஆண்டு என் தந்தை தஞ்சாவூரில் போட்டியிட்டார். அப்போது, அவருடன் நானும் அங்கு தேர்தல் பணியாற்றினேன். அப்போது, அவர் இரவு, பகல் பாராமல் அனைத்து பூத்துகளுக்கும் செல்வார். யாரும் பூத்தில் இல்லையென்றால் கண்டிப்பார்.
அதேபோல் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துச் செயல்படுவார். இதை அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். அதனால்தான் திமுகவுக்கு தேர்தலில் வெற்றியைத் தேடித் தருகிறேன்.
1967ல் சைதாப்பேட்டை தேர்தலில் பணியாற்றியபோது முதல்வர் கருணாநிதியை கொலை செய்ய வந்தனர். ஆனால், அவர்களிடமிருந்து துணிச்சலாக தப்பித்து ஒரு குடிசையில் தங்கினார். அங்கே இருந்த பெண்கள் அவருக்கு உதவி செய்தனர். இந்தத் துணிச்சலை அவரிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன்.
திருமங்கலத்தில் நான் சொன்னது போல் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால்தான் எனக்கு இந்தப் பதவி கிடைத்தது. நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தது நீங்கள்தான். உங்களுக்கு உழைப்பதற்காகத்தான் இந்த அமைச்சர் பதவியை ஏற்றிருக்கிறேன்.
திருமங்கலம், கம்பம் தொகுதி இடைத்தேர்தல்களில் தேர்தல் பணியாற்றியபோது கலைஞர் என்னைத் தொடர்பு கொண்டு தொகுதி நிலவரம் பற்றி கேட்பார். ஆனால், திருச்செந்தூர் இடைத்தேர்தலின் போது நான் கிட்டத்தட்ட 30 நாள் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளைக் கவனித்து வந்தேன். அப்போது என் தந்தையார் என்னிடம் ஒருதடவைகூட தொடர்பு கொண்டு பேசவில்லை; தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது என்றும் கேட்கவில்லை. இதனால் நான் கோபத்துடன் இருந்தேன்.
நான் சென்னை சென்றபோது எனது தாய் அவரிடம், உங்கள் மகன் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று கூறிவிட்டு, ஒரு தடவைகூட மகனிடம் தொடர்பு கொண்டு பேசாதது ஏன்? என்று கேட்டார்.
நான் தந்தையை சந்தித்தபோது அவரிடம், ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டது உள்பட தென்மாவட்டங்களில் அதிமுக போட்டியிடும் இடங்களில் எல்லாம் நாங்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது என்று என்னிடம் அடிக்கடி தொடர்புகொண்டு கேட்டீர்கள். இப்போது அதுமாதிரி கேட்காதது ஏன் என்றேன். அதற்கு, நீ களத்தில் இருந்தால் திமுக நிச்சயம் ஜெயித்துவிடும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நான் உன்னுடன் பேசவில்லை என்று அவர் சாதுரியமாக என்னிடம் பதில் கூறினார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க எனது தாயார் தயாளு அம்மாள், சகோதரர் மு.க.ஸ்டாலின், சகோதரி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் வந்திருக்கின்றனர்.
பொதுமக்களாகிய நீங்களும் இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள். இதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டும். நீங்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கு என்ன கவலை. ஒரு அரசியல்வாதி என்ற முறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நான் எனது தந்தையிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.
ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 2011ல் அதிமுக என்ற ஒரு அரசியல் கட்சி இருக்காது, இதை நான் உறுதியாகக் கூறுகிறேன் என்றார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்க் குரல் ஒலிக்கும்:
முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி நவீன வசதிகளுடன் கூடிய இலவச கழிப்பறைகளை மதுரையில் கட்டியுள்ளார் அழகிரி.
அதில் முதல் கட்டமாக கட்டப்பட்டுள்ள 10 கழிப்பறைகள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. அழகிரி முன்னிலையில் அமைச்சர்கள் இதைத் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி,
ஏழை, எளிய மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக டெல்லியில் இருப்பதை போன்று நவீன கழிப்பறைகள் மதுரை மாநகரில் 10 இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு உள்ளன. இது போன்ற சேவைகள் தொடரும்.
தமிழ்நாட்டை சேர்ந்த திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழில் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.
உலக செம்மொழி மாநாடு நடைபெறுகின்ற இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் நிச்சயம் என்னுடைய தமிழ்க் குரல் ஒலிக்கும் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications