இங்கிலாந்துக்கான மாணவர் விசா: தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
டெல்லி: இங்கிலாந்துக்கான கல்வி விசா கேட்டு விண்ணப்பங்கள் ஏராளமாக குவி்ந்து வருவதால் டெல்லி, சண்டிகர் மற்றும் ஜலந்தர் ஆகிய மையங்களில் விண்ணப்பங்கள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத வகையில் அளவுக்கதிகமான விசா விண்ணப்பங்கள் வந்துள்ளதால் பிப்ரவரி 1 முதல் புதிய விசா விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது என டெல்லியில் உள்ள இங்கிலாந்து துணைத் தூதர் நிகெல் கேசி மற்றும் இங்கிலாந்து பார்டர் ஏஜென்சி மண்டல இயக்குனர் கிரிஸ் டிக்ஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டில் ஆக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்து செல்வதற்கான மாணவர்கள் விசா கேட்டு ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கடந்த 2009ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 13 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறிப்பாக வட இந்திய பகுதியில் இருந்து விசா விண்ணப்பங்கள் திடீரென அதிகரித்துள்ளன.
இதனால் ஸ்டூடன்ட் விசா நடைமுறை சலுகைகளை தவறாக பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆனால் எம்மாதிரியான முறைகேடுகள் நடக்ககூடும் என்பது குறித்து இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை.
எனினும்,'இந்தியாவில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீக்கப்பட வேண்டியதை உறுதி செய்யும் வகையிலும், உண்மையான கல்விக் காரணங்களுக்காக இங்கிலாந்து செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் புதிய விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்படுகிறது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications