சென்னையில் கொள்ளையன் கழுத்தை அறுத்துக் கொலை - கூட்டாளிகளே கொன்றனர்
சென்னை: சென்னையில் பிரபல கொள்ளையன் கொடூரமாக கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டார். திருடிய நகையை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளிகளேக் கொன்று சாக்குப் பைக்குள் போட்டுச் சென்று விட்டனர்.
வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (26), இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், உமா மகேஸ்வரி (6), இளவரசன் (4) என்ற குழந்தைகளும் உள்ளனர். கலையரசனுக்கு சொந்த ஊர் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள மொழிச்சூர்.
தாமரைச்செல்வியை காதலித்து திருமணம் செய்தார். சென்னையில் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இங்கு வேலை பார்த்து வந்தாலும் திருட்டில் ஈடுபடுவதுதான் கலையரசனின் முக்கிய வேலையாக இருந்துள்ளது.
இவருடன் மனோஜ், மணி கண்டன், பிரபு, கலையரசன், காமேஷ், பிரபா, சதீஷ் ஆகியோரும் சேர்ந்து கொள்ளையடிப்பது வழக்கமாம். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் திருடும் நகைகளை கலையரசனிடம் கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி வரச் சொல்வார்கள். அவரும் நகைகளை அடகு வைத்து கொடுத்துள்ளார். எடுபிடி வேலைகளும் செய்து வந்தார்.
கடந்த 28-ந் தேதி முதல் திடீர் என்று கலையரசனை காணவில்லை. மனைவி தாமரைச்செல்வி பல இடங்களில் தேடினார். உறவினர்களிடம் விசாரித்தார். இதனால் நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணையில் இறங்கினர். கலையரசனின் கூட்டாளிகள் குறித்து விசாரித்தனர். அப்போது மனோஜ் உள்பட 7 பேர் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
7 பேரில் மனோஜ், மணி கண்டன், பிரபு ஆகிய 3 பேர் சிக்கினர். விசாரணை நடத்தியதில் கலையரசனை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
மனோஜ் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பாக்கியமேரி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகை கொள்ளையடித்துள்ளான். அந்த நகையை கலையரசனிடம் கொடுத்து அடகுவைத்து தரமாறு கேட்டான்.
செயினை வாங்கிக் சென்று ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்தார் கலையரசன். இருப்பினும் அந்தப் பணத்தை மனோஜுக்குத் தர விரும்பாமல், செயின் தொலைந்து போய் விட்டதாக கூறியுள்ளார். இதை மனோஜும், கூட்டாளிகளும் நம்பவில்லை.
சம்பவத்தன்று கலையரசன், மனோஜ் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து உப்பு கால்வாய் என்ற இடத்தில் மது குடித்தனர். கலையரசன் எல்லோருக்கும் பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார்.
அப்போது கலையரசனுக்கும், மனோஜுக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே மனோஜ் பீர்பாட்டிலை எடுத்து கலையரசன் தலையில் அடித்துள்ளான். மேலும் உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்துள்ளான். மார்பிலும் பாட்டிலால் குத்தினான். இதனால் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கலையரசன் பிணமானார்.
பின்னர் கலையரசன் பிணத்தை சாக்கு மூட்டையில் வைத்துக் கட்டி உப்புக் கால்வாயில் வீசி விட்டனர். உடலில் கல்லைக் கட்டி வீசினர். இதனால் உடல் மேலே வராது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.
இந்தத் தகவல் தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீஸார் பிணத்தை அழுகிய நிலையில் மீட்டனர்.
தற்போது மனோஜ், மணிகண்டன், பிரபு ஆகியோர் மட்டும் சிக்கியுள்ளனர். இதில் தொடர்புடைய கூட்டாளிகளான காமேஷ், பிரபா, சதீஷ் ஆகியோர் மாதவரம் பகுதியில் நடந்த வழிப்பறியில் நேற்று புறநகர் போலீசாரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கலையரசன் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வியாசர்பாடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications