பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வையுங்கள்: சொல்கிறார் பொன்முடி
சென்னை: நன்றாகப் படித்து நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை, பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் 'சென்னை அறிவியல் திருவிழா' தொடங்கியது. பொன்முடி விழாவை தொடங்கி வைத்தார். அறிவியல் கண்காட்சி தொடக்க விழா, பெண் விஞ்ஞானிகள், அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.
விழாவில் பொன்முடி பேசுகையில், 'மாணவர்களுக்கு அறிவியலில் மட்டுமல்ல அரசியல், சமுதாயம், குடும்பம் என்று எல்லாவற்றிலும் விழிப்புணர்வு வேண்டும். அப்போது தான் முன்னேற்றம் ஏற்படும்.
அறிவியல் துறையில் இந்தியா பெரிய அளவில் ஏன் முன்னேறவில்லை? என்று கேட்டால் விஞ்ஞானிகள் ஒரே வரியில் 'அரசியல்வாதிகள்' என்று சொல்வார்கள்.
என்னைக் கேட்டால், தாய்மொழியில் கல்வி கற்காதவரை அறிவியலில் முன்னேற்றம் ஏற்படாது என்பேன். தாய்மொழி கல்வியின் மூலம் சீனா இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வருவது சாதாரணமான விஷயம் அல்ல. மக்கள் ஒப்புக் கொண்டால் நாளையே தமிழ் வழிக் கல்வியை தமிழக அரசு கொண்டு வரும்.
மக்களின் எண்ணங்களை ஒட்டியே அரசு முடிவெடுக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் எனது குழந்தை ஆங்கிலத்தில் படிப்பது கருணாநிதிக்கு பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டுவார்கள்.
நன்றாகப் படித்து நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை, பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்க வேண்டும். எனக்கும் சேர்த்து தான் இதைச் சொல்கிறேன்.
கல்வித் துறையில் மாற்றத்தைக் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காகவே செயல்முறை கல்வி, சமச்சீர் கல்வி, தாய்மொழிக் கல்வி ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறோம்.
ஆரம்பக் கல்வியில் மாற்றம் ஏற்பட்டால் தான் உயர்கல்வி சிறப்பாக இருக்கும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஆய்வு மனப்பான்மை வளரும்.
அறிவு ரீதியாக வளர்ச்சி அடைய தாய்மொழிக் கல்வியும், வியாபார ரீதியாக முன்னேற்றம் அடைய தொடர்பு மொழியாக ஆங்கிலமும் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளை தமிழில் கொண்டுவர அரசு தயாராக உள்ளது. அதனைச் செயல்படுத்த பல்கலைக்கழகங்களும், அறிஞர்களும் முன்வர வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications