ஜெயராம் வீடு: அலுவலகம் மீது தாக்குதல்-தீ வைப்பு: நாம் தமிழர் இயக்கத்தினர் கைது

Subscribe to Oneindia Tamil

Jayaram
தமிழ் பெண்களை கறுத்துத் தடித்த எருமைகள் என்று கிண்டலடித்த நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டுக்கு சிலர் தீ வைத்தனர். ஜன்னல்களை அடித்து உடைத்தனர். வாசலில் இருந்த காரையும் அடித்து நொறுக்கினர். இது தொட்ரபாக நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயராம் மலையாள ஏசியாநெட் டி.வி. ஒன்றுக்கும், தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றுக்கும் கொடுத்த பேட்டியில், தமிழ்ப் பெண்களைப் பற்றி இழிவான கருத்தை கூறியிருந்தார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதற்கிடையில், சமூக நீதி பேரவை அமைப்பின் பெண்கள் பிரிவு மாநில பொறுப்பாளர் வக்கீல் ஏ.இந்திராணி, நடிகர் ஜெயராம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். சென்னை எழும்பூர் 14வது கோர்ட்டில் அவர் சார்பில், வக்கீல் கே.பாலு இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார்.

ஜெயராம் வீடு-அலுவலகம் மீது தாக்குதல்:

நடிகர் ஜெயராமின் வீடு சென்னை வளசரவாக்கம் ஜானகிநகர் லட்சுமி தெருவில் உள்ளது. நேற்று மாலை 25 பேர் கொண்ட கும்பல் கையில் தீப்பந்தம், கற்கள், உருட்டுக் கட்டைகளுடன் ஜெயராமின் வீட்டிற்கு சென்றனர். வீட்டு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் காவலுக்கு இருந்தனர்.

தீப்பந்தத்துடன் சென்ற கும்பல் முதலில் பெட்ரோல் ஊற்றி தீப்பந்தம் கொளுத்தி அதைக் காட்டி போலீசாரை பின்வாங்க வைத்து உள்ளே புகுந்துள்ளனர். தடுக்க முயன்ற போலீசாருக்கும் உதை விழுந்தது. அவர்கள் முற்றிலும் தள்ளி நிற்க உடனே அந்த கும்பல், வீட்டு காவலாளியை அடித்து தள்ளிவிட்டு திபுதிபுவென்று உள்ளே புகுந்தனர்.

அலுவலகம் தீவைப்பு-போலீஸ் வேடிக்கை:

பின்னர்,ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள நடிகர் ஜெயராமின் அலுவலகத்திற்குள் தீப்பந்தத்தை வீசினார்கள். கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர். அலுவலகத்தில் உள்ள சோபா போன்ற பொருட்களும், இதர பொருட்களும் கொழுந்துவிட்டு எரிந்தன.


பின்னர், வீட்டின் முன்பக்கம் இருந்த 5 அடி உயர பிள்ளையார் சிலையை அடித்து உடைத்தனர். வீட்டின் மெயின் கதவையும் அடித்து நொறுக்கினார்கள். பின்னர், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சாமி படம் மற்ற அலங்கார பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்கள்.

அடுத்தபடியாக வீட்டின் முன்பு இருந்த ஹூண்டாய் காரையும் உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கினார்கள். சுமார் ஒரு மணி நேரம் வீட்டை சூறையாடினார்கள்.காவலுக்கு இருந்த போலீசார் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய கும்பல்,'தமிழ் வாழ்க. தமிழன் வாழ்க. தமிழச்சியை இழிவுபடுத்தியவர்களை சும்மா விடமாட்டோம். தமிழ் விரோதி ஜெயராமை ஒழிப்போம்'என்பன போன்ற கோஷங்களை முழங்கினார்கள்.

அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக இருந்தது.அங்கு என்ன நடக்கிறது என்றே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியவில்லை.

இதையடுத்து,தகவல் தெரிந்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சக்திவேலு,துணை கமிஷனர்கள் பெரியய்யா, மெளரியா, உதவி கமிஷனர்கள் மனோகரன், கண்ணபிரான், பரந்தாமன் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து சென்றனர்.

நாம் தமிழர் இயக்கத்தினர்...

போலீசாரை பார்த்ததும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடினார்கள். அவர்களை விரட்டிச் சென்று போலீசார் பிடித்தனர். 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டைரக்டரும், நடிகருமான சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறினார்கள்.

பால முரளி (வயது 26). சதீஷ்குமார் (25), டேவிட் பெரியார் (28), அதியமான் (41), இளந்தேவன் (35), தமிழ் செரியன் (34), இன்னொரு டேவிட் (37), மணிகண்டன் (29) உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது நடிகர் ஜெயராம் வீட்டில் இல்லை. அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தார்.ஜெயராமின் மனைவியும், நடிகையுமான பார்வதி என்ற அசுவதி, ஜெயராமின் 70 வயது தாயார் தங்கம், மகள் 8வது படிக்கும் மாளவிகா, வேலைக்கார பெண்கள் கோகிலா, லட்சுமி, சரோஜா ஆகியோர் வீட்டில் இருந்தார்கள்.

தாக்குதல் சம்பவத்தால் பயந்துபோய் அவர்கள் படுக்கை அறைக்குள் கதவை பூட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டனர். சம்பவம் முடிந்த பிறகே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,நடிகர் தியாகராஜன் ஆகியோர் வந்து ஜெயராமின் மனைவியிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்கள். தொடர்ந்து நடிகர் ஜெயராம் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு:

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கவும்,படம் பிடிக்கவும் ஏராளமான பத்திரிகை,தொலைக்காட்சி நிருபர்களும்,கேமராமேன்களும் குவிந்துவிட்டனர்.ஆனால்,பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமலும், வீட்டிற்குள் சென்று படம் பிடிக்க விடாமலும் போலீசார் தடுத்தனர்.

உயர் போலீஸ் அதிகாரிகளிடம் படம் பிடிக்க அனுமதிக்கும்படி பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அனுமதிப்பதாக கூறினார்கள். ஆனால், சம்பவம் நடந்த வீட்டில் இருந்த போலீசார் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

சென்னை நகர போலீசார் தற்போது செய்தி சேகரிக்க விடாமலும், படம் பிடிக்க விடாமலும் பத்திரிகையாளர்களை தடுப்பதை மட்டுமே ஒரு உள்நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினர் நிருபர்கள். ஜெயராமின் குடும்பத்தினர் படம் எடுக்க அனுமதித்த பிறகும் போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்கலங்கிய ஜெயராம்:

இந் நிலையில் இன்று சென்னை திரும்பிய ஜெயராம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,

மலையாள டி.வி.க்காக சமீபத்தில் என்னிடம் பேட்டி எடுத்தனர். அப்போது ஒரு வசனத்தை மிமிக்ரி செய்தேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 18 வருடங்களாக வசிக்கிறேன். என் வீடு இங்கு தான் உள்ளது. என் குடும்பத்தினர் அனைவரும் தமிழில் தான் பேசுகிறோம்.

நான் பேசிய வார்த்தையால் தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் தாய்மார்கள் மனது புண்பட்டு இருந்தால் மீண்டும் கரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு ஜெயராம் கூறியபடி இருகைகளையும் உயரே தூக்கி கும்பிட்டார். அப்போது அவரது கண்கள் கலங்கின.

இதையடுத்து தனது வீட்டுக்கு வந்த அவர் அங்கிருந்த நிருபர்களிடம் பேசுகையில், நான் டிவிக்குக் கொடுத்த பேட்டியை சரியாக பார்த்தால் அதில் தவறு ஏதும் இல்லை என்பது தெரிய வரும்.

கடந்த 18 ஆண்டுகளாக நான் சென்னையில்தான் வசித்து வருகிறேன். நான் பேசுவதும் தமிழ். என் வீட்டில் இருப்பவர்கள் பேசுவதும் தமிழ்தான். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேசுவது என்பது எனது தாயை அவமதிப்பது போன்றது.

நேற்று என்னுடைய வீட்டில் நடந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. அதை மீண்டும் வாங்கி கொள்ளலாம்.

ஆனால், சினிமாவில் கடந்த 23 ஆண்டுகளாக எனது நடிப்பு தொழிலில் பல விருதுகளை பெற்றுள்ளேன். தமிழக அரசின் விருதும் எனக்கு கிடைத்துள்ளது. எனது மகன் ஜனாதிபதி கையில் நடிப்புக்காக தேசிய விருது பெற்றுள்ளான். நன்றாக பியானோ வாசிப்பதில் எனது மகளுக்கும் விருது கிடைத்துள்ளது. இந்த விருதுகள் அனைத்தையும் நான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தேன். நேற்று நடந்த தாக்குதலில் இவை அனைத்தும் உடைந்து போய் விட்டது. இதனால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

என் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் நேரில் வந்தால் என் மீது தவறில்லை என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

மலையாள சினிமாவில் தமிழர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாக டைரக்டர் தங்கர்பச்சான் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, நான் நடித்த படங்களில் அப்படி எந்த காட்சியும் இடம் பெற்றதில்லை.

இந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக செயல்பட்ட தமிழக முதல்வருக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+