தமிழகத்திற்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அரசிடம் கோரியுள்ளேன் - ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர்கள் மாநாட்டில் எடுத்து வைத்தேன் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லியில் 2 நாள் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்குப் பதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

நேர்று இரவு அவர் மாநாட்டை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு சென்னை வருகிறேன். முதல் நாள் மாநாட்டில் விலைவாசி ஊயர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் நான் பேசும்போது தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்த விவரங்களை எடுத்து கூறினேன்.

தமிழகத்தில் 1 கிலோ அரிசி ரூ.1-க்கும், 10 வகையான மளிகை பொருட்கள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுவதை கூறினேன். நியாய விலை கடைகளில் கோதுமை, எண்ணை மற்றும் காய்கறிகள் வினியோகம் செய்யப்படுவது பற்றியும் எடுத்து கூறினேன்.

தமிழகத்தில் வினியோக பொருட்களை கடத்தி பதுக்கி கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் தெரிவித்தேன்.

மத்திய அரசு தமிழகத்திற்கு கோதுமை, அரிசி ஆகியவற்றின் மானியத்தை உயர்த்தி தரவேண்டும். இதன் மூலம் தமிழக மக்களுக்கு கூடுதலாக வினியோகம் செய்யப்படும் என்று வலியுறுத்தினேன்.

இரண்டாம் நாள் சட்டம்-ஓழுங்கு மாநாட்டில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளதை தெரிவித்தேன்.

மேலும் சிறப்பாக காவல்துறை செயல்பட நவீனப்படுத்த வேண்டி உள்ளது. காவல்துறைக்கு வாகனங்கள், ஆயுதங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை செய்ய ரூ.51 கோடி நிதி உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரினேன்.

அதுமட்டுமல்ல சென்னை மாநகரம், அதைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் மக்கள் அமைதியாக வாழ புதிய பாதுகாப்பு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கூறினேன்.

டெல்லியில் பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே அமைச்சர் மம்தா பனர்ஜி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோரை சந்தித்து பேசினேன்.

மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியபோது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும். தமிழகத்தில் உள்ள மீட்டர்கேஜ் பாதைகள் அனைத்தும் அகலப்பாதையாக மாற்றி அமைக்கவேண்டும். கூடுதலாக ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்க நிதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

கமல்நாத்தை சந்தித்தபோது கோவையில் இந்த ஆண்டு உலக செம்மொழி மாநாடு நடக்க உள்ளது. அதற்கு வசதியாக கோவை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தரம் வாய்ந்த புதிய சாலைகள் அமைக்கவேண்டும்.

பழைய சாலைகளை சீரமைக்க கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என கூறினேன்.

மேலும், கிருஷ்ணா-கோதாவரி பகுதியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு உரிய பங்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சினையில் மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும் என்பதையும் எடுத்து கூறினேன்.

2 நாள் மாநாட்டில் தமிழகத்தின் சாதனைகளை எடுத்து கூறினேன். தமிழகத்தின் நியாயமான உரிமைகளையும், நிதிÛயும் கேட்டு கொடுக்க சொல்லி வாதாடி வந்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

தனது டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கை மாநாட்டிற்கிடையே சந்தித்துப் பேசினார் ஸ்டாலின்.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற முதல்-மந்திரிகள் மாநாட்டின் போது பிரதமர் மன்மோகன் சிங்கை துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

அப்போது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயு தமிழகத்திற்கும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை விரைவில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணும் வகையில் ரூ.240 கோடி செலவில் தீட்டப்பட்டுள்ள திட்டததிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியினை உடனடியாக ஒதுக்கிடுமாறும், ஸ்டாலின் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், மார்ச் மாதம் தமிழகத்தின் புதிய சட்டமன்றப் பேரவை கட்டிட திறப்பு விழாவிற்கு முதல்-அமைச்சர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று வருகைத்தர இசைவு தெரிவித்தமைக்காக பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மாநாட்டில் பேச்சு..

முன்னதாக நேற்று நடந்த உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேசியதாவது...

நமது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டில் எந்தவொரு பெரும் தீவிரவாத செயலும் நாட்டில் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்ப, உள்நாட்டு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக டிசம்பர் 2007 முதல் 4-வது முறையாக மத்திய, மாநில அரசுகள் கூடி விவாதிப்பது உள்நாட்டு பாதுகாப்பு மீது நாம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, துணை பன்முக முகமை மத்திய-மாநில தனிப்பிரிவு மையம் அமைக்கப்பட்டிருப்பது, கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது, மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருப்பது போன்றவை, உள்நாட்டு பாதுகாப்பில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தமிழகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு நிலை சிறப்பாக உள்ளது. தமிழக போலீசாரும், புலனாய்வுத்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வரும் தீவிர முயற்சியால், மாநிலத்தில் எல்லாவிதமான தீவிரவாதச் செயல்களும் கட்டுக்குள் இருந்து வருகிறது.

தமிழக அரசு அமைத்துள்ள 3-வது போலீஸ் கமிஷன், மாநில போலீசாரின் ஆற்றலை வளர்க்க தேவையான வழிவகைகளை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. அதனை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மிகவும் நவீனமான மாநில போலீஸ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்நாட்டு பாதுகாப்பு மாநாட்டுக்கு பிறகு, தற்போது தமிழகத்தில் 1 புதிய காவல் மாவட்டம், 10 உட்கோட்டங்கள், 10 போக்குவரத்து மற்றும் ஒரு புதிய போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. புதிதாக 600 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக, 28 டி.எஸ்.பி.க்கள் 212 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4339 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு அமைப்பு 476 போலீசாருடன் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விரும்பினால், கள்ளநோட்டு தொடர்பான வழக்குகள், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கள்ளநோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்பது கூடாது. இது தமிழகத்தின் கருத்து. ஒவ்வொரு வழக்கின் தன்மையின் அடிப்படையில், விவாதித்து, தேவைப்பட்டால் அந்த குறிப்பிட்ட வழக்கை மாற்றிக் கொள்ளலாம்.

மாநில புலனாய்வு அமைப்புக்கு 600 புதிய ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். உள்விவகார பாதுகாப்பு புலனாய்வு ஐ.ஜி. என்ற புதிய பதவியையும் உருவாக்கியுள்ளோம். இதுதவிர, 289 பேரைக் கொண்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவும், புலனாய்வுப் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

புலனாய்வுக்கு போலீசாருக்கு 10 சதவீதம் கூடுதல் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை மற்றும் துணை பன்முக முகமை மத்திய மாநில தனிப்பிரிவு மைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பரிசோதனையின்போது (ஆபரேஷன் ரக்ஷக்), இந்த கட்டுப்பாட்டு அறையின் திறன் சோதித்துப் பார்க்கப்பட்டதில் திருப்திகரமாக இருந்தது. புலனாய்வு மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும் என்பதை தமிழகம் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் தீவிரவாத செயல்களுக்கு எதிரான செயல் திட்ட வழிவகைகள் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும், அதிவிரைவு நடவடிக்கை குழுக்கள், வெடிகுண்டு கண்டுபிடிப்பு - செயலிழப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதோடு, கூடுதலாக அதிவேக செயல்பாட்டு போலீஸ் படையும் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 300 வீரர்களை கொண்ட கமாண்டோ படை அமைக்கப்பட்டு எந்த வித ஆபத்தையும் எதிர்கொள்ளும் தயார்நிலையில் உள்ளது. சென்னை ஒரு மாபெரும் நகரம். அங்கு, காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. பல பரிந்துரைகள் அனுப்பப்பட்டும், இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.

மின்-ஆளுகை மூலமாக தமிழக காவல்துறையை கம்ப்iட்டர் மயமாக்கும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில், கட்டணமில்லா இலவச சேவைமையமும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு காவல்துறை இணையதளத்தில், புகார் பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. 3-வது போலீஸ் கமிஷன் அளித்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. காவல்துறை நவீன மயமாக்கலுக்காக மத்திய அரசிடம் கோரப்பட்ட ரூ.51 கோடி நிதியுதவி இதுவரை கிடைக்கவில்லை.

தமிழகத்தில் இடதுசாரி தீவிரவாதிகள் செயல்பாடுகள் தாக்குதல் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதில்லை. மாநில அரசின் கியூ பிரிவு 439 கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆபரேஷன் ரக்ஷக்' என்ற பரிசோதனை நடத்தப்பட்டு, மாநில போலீசாரின் தயார் நிலை உறுதிபடுத்தப்பட்டது. 12 கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையங்கள், 5 புறக்காவல் நிலையங்கள், 87 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்புப் பிரிவுக்கு கட்டணமில்லா தொலைபேசி புகார் பிரிவு ஏற்படுத்தப்பட்டு நல்ல பலன்களை தந்துள்ளது.

மாநில காவல் அமைப்புகள் மற்றும் மத்திய அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் சிறப்பான ஒருங்கிணைப்பு இருந்தால், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற தேவையற்ற நடவடிக்கைகள் தடுக்கப்படலாம். நாட்டின் தெற்கு கடற்கரைப்பகுதி, சர்வதேச எல்லையை கொண்டுள்ளது. எனவே, வடஇந்தியாவில் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், தெற்குமுனைக்கும் (தமிழகம்) தரப்படவேண்டும். எனவே, இப்பகுதி பாதுகாப்புக்கு நியமிக்கப்படும் பாதுகாப்புப் பிரிவினரின் செலவுகளை மத்திய அரசு ஏற்கவேண்டும். 30 கடலோர போலீஸ் நிலையங்கள் மற்றும் 20 படகுகள் மற்றும் 175 வாகனங்கள் வாங்குவதற்காக மத்திய அரசிடம் உதவி கோரப்பட்டுள்ளது. புதிய படகுத்துறை கட்டுவதற்காகவும், மத்திய அரசிடம் உதவி கோரப்படவுள்ளது.

இதற்கு முன்பாக, 3 முறை நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை தமிழக அரசு முழு கவனத்துடன் பரிசீலித்து வருகிறது. அந்த கூட்டங்களில் மாநில அரசுகள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவது பாராட்டுக்குரியது. இது, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படவேண்டும் என்ற அடிப்படையான கருத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+