ஸ்டாலினையும் இன்று சந்தித்தார் கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ.
சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முதல்வர் கருணாநிதி ஆகியோரைத் தொடர்ந்து இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்தார்.
இதன் மூலம் திமுகவின் முக்கியத் தலைவர்கள் மூவரையும் அவர் சந்தித்து முடித்து விட்டார். இதையடுத்து அவர் எப்போது தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு திடீரென மு.க.அழகிரியை அவரது மதுரை இல்லத்தில் சந்தித்து பேசினார் ராதாகிருஷ்ணன். இதையடுத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவரிடமிருந்த கட்சிப் பதவியை மட்டும் பறித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஆனால் ஒரு முடிவோடு கிளம்பியுள்ள ராதாகிருஷ்ணன் அதைப் பொருட்படுத்தாமல் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார். தனது தொகுதியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் அவரிடம் உறுதி அளித்தார்.
அடுத்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் சேருவாரா அல்லது எஸ்.வி.சேகர் பாணியில், எதுவும் செய்யாமலேயே தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications