திண்டுக்கல் பாண்டியனின் உடலைப் பெற பெற்றோர் - 2வது மனைவி குடும்பம் போட்டி
சென்னை: திண்டுக்கல் பாண்டியனின் உடலைப் பெறுவது தொடர்பாக அவரது பெற்றோருக்கும், 2வது மனைவி குடும்பத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் பெற்றோரிடம் போலீஸார் உடலை ஒப்படைத்தனர்.
சென்னை அருகே பனையூரில் வைத்து பாண்டியன் மற்றும் கூட்டாளியான கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து பாண்டியனின் தாய், தந்தை, மகன், மகள், உறவினர்கள் விரைந்து வந்தனர். அதேபோல, பாண்டியனின் 2வது மனைவியான சிறுமணி, அவரது தங்கை, உறவினர்கள் திண்டுக்கல்லில் இருந்து வந்தனர்.
சடலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாரிடம் திண்டுக்கல் பாண்டியனின் அம்மா தமிழரசி, அப்பா நாராயண பிள்ளை, மகன் பாண்டியராஜன் (21), மகள் தமிழ்செல்வி (17), சகோதரிகள் புவனேஸ்வரி, சித்ரா மற்றும் உறவினர்கள் கேட்டனர்.
அதே நேரத்தில் இரண்டாவது மனைவியான சிறுமணி (30), அவரது தங்கை ஆரோக்கிய செல்வி, அவரது மகன் அருண் மற்றும் உறவினர்கள் தங்களிடம்தான் பாண்டியனின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இரு தரப்புக்கும் இடையே தகராறும் மூண்டது. போலீஸார் குறுக்கிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினர்.
திண்டுக்கல் பாண்டியனின் முதல் மனைவியான விஜயா உயிருடன் இல்லை. இதனால்தான் பெற்றோர்கள் உடலை எடுத்துச் செல்ல வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
எங்களது பூர்வீகம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள ஆத்திரம்பட்டி கிராமம் ஆகும். திண்டுக்கல்லில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளோம்.
தற்போது தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் கிராமத்தில் வசித்து வருகிறோம். பிரேத பரிசோதனை முடிந்ததும் சடலத்தை எங்களது சொந்த ஊரான ஆத்திரம்பட்டி கிராமத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.
பாண்டியனின் சடலத்தை பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்குத்தான் இருக்கிறது. எங்கள் தரப்பு நியாயத்தை அதிகாரிகளிடம் எடுத்து சொல்வோம் என்றனர்.
தீவிர திமுக ஆதரவாளர்..
சிறுமணி கூறுகையில்,
நான் திண்டுக்கல் நகர தி.மு.க. மகளிரணி துணை செயலாளராக இருக்கிறேன். எனக்கு தெரிந்தவங்க வீட்டுக்கு பாண்டியன் அடிக்கடி வருவார். அப்போது எனக்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 1995-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தை இல்லை.
எனது கணவர் பாண்டியன், தி.மு.க. தீவிர ஆதரவாளர். 1998-ம் ஆண்டு திண்டுக்கல்லில் எனது கணவரின் தம்பி நாகராஜை எதிர் கோஷ்டியினர் கொலை செய்துவிட்டனர்.
தம்பியை இழந்து பெரிதும் வேதனைப்பட்ட எனது கணவர், எதிர்காலத்தில் என்னை யாராவது வெட்டிக் கொன்று விட்டாலோ அல்லது போலீசார் சுட்டுக்கொன்றாலோ எனது சடலத்தை தம்பியின் சமாதி அருகேதான் புதைக்க வேண்டும் என்று சொன்னார்.
இந்த நிலையில், எம்.பி. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக திண்டுக்கல் சென்றேன். கடந்த ஓராண்டாக எனது கணவர் என்னிடம் பேசவில்லை. அவ்வப்போது எங்கள் வக்கீல்தான் என்னிடம் வந்து உங்கள் கணவர் வெளியூரில் நன்றாக இருக்கிறார். பாண்டியன் டெலிபோன் செய்யவில்லை என்று வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டுப் போவார்.
இந்த நிலையில் எனது கணவரை போலீசார் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல் கிடைத்து சென்னை வந்தேன். அவர் இல்லாமல் அனாதையாகிவிட்டேன். கடைசிகாலம் வரை என்னுடன் வாழ்ந்த அவரது உடலை பெற்றுக் கொள்ளும் உரிமை எனக்குத்தான் இருக்கிறது. கணவரின் உடலை அவரின் விருப்பப்படி அவர் தம்பி நாகராஜ் சமாதி அருகே அடக்கம் செய்வேன் என்றார்.
இந்த நிலையில் ஆர்.டி.ஓ. மோகன் மாலை 5.30 மணிக்கு சவக்கிடங்கிற்கு வந்தார். திண்டுக்கல் பாண்டியன் எப்படி என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தினார்.
இதன்பின்பு பாண்டியனின் தாய், தந்தை, தங்கை ஆகியோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். 2-வது மனைவி சிறுமணி, என்னையும் ஆர்.டி.ஓ. அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.
இவருக்கு ஆதரவாக 3 வக்கீல்கள், சட்டப்படி பாண்டியனின் உடலை 2-வது மனைவியிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து 2-வது மனைவி சிறுமணியை அழைத்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, முறையாக திருமண பத்திரிகை அடித்து, திருமணம் நடைபெற்றதா? என்று கேட்டார். அதற்கு சிறுமணி இல்லை என்றும், ஆனால், அவர் எனக்கு ரகசியமாக கழுத்தில் கட்டிய தாலி இதோ இருக்கிறது என்று தூக்கி காட்டினார்.
மேலும், எனது கணவர், அவரது உடலில் சிறுமணி என்று, எனது பெயரை பச்சை குத்தியிருக்கிறார். ஆகவே, நான் தான் அவருடைய மனைவி. அதனால், என்னிடம்தான் பிணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்த பின்பு, சிறுமணியை அழைத்து பாண்டியனுடைய தாய், தந்தையிடம்தான் பிணத்தை ஒப்படைக்க முடியும் என்று ஆர்.டி.ஓ. கூறி விட்டு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து, உடலைப் பெறும் போராட்டம் முடிவுக்கு வந்தது. திண்டுக்கல் பாண்டியனின் உடலை டாக்டர்கள் பாஸ்கரன் குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது, உடலில் இருந்த குண்டுகள் அகற்றப்பட்டன. இதன் பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் பாண்டியனின் உடல் இரவு 8 மணிக்கு மேல், பாண்டியனின் தாய், தந்தை மற்றும் தங்கை புவனேஸ்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின்பு, பாண்டியனுடைய உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அமைந்தகரையில் உள்ள புவனேஸ்வரியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடலை சிறிது நேரம் வைத்திருந்தனர். பின்பு, அரும்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் பாண்டியனுடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
இதேபோல், என்கவுண்டரில் பலியான கூடுவாஞ்சேரி வேலுவின் தாய் காந்திமதியிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் டாக்டர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பாண்டியனின் கூட்டாளி மயிலாப்பூரில் கைது:
இதற்கிடையே மயிலாப்பூரில் கத்தியுடன் ரகளை செய்த திண்டுக்கல் பாண்டியனின் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பாண்டிக்கு நெருங்கிய கூட்டாளியாக இருந்த மயிலாப்பூர் சண்முகம்பிள்ளை தெருவைச்சேர்ந்த பெரிய மகேஷ் என்ற ரவுடி போலீசாரை திட்டியபடி, கத்தியுடன் வீதியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டான்.
அந்த வழியாக வருவோர் போவோரை எல்லாம் வெட்ட முயற்சி செய்தான். இதில் ஒருவருக்கு வெட்டு விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் தலைமையிலான போலீசார் பெரிய மகேஷை சுற்றி வளைத்து பிடித்தனர். அவன் மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு உள்பட 17 வழக்குகள் உள்ளன.
பாண்டியன் துணையுடன் சூனாம்பேடு ராட்டினகுமார் மற்றும் அவனது கூட்டாளியை தீர்த்துக்கட்டியதால் தாதாவாக வலம் வந்தான் மகேஷ்.
மயிலாப்பூரில் கொலை முயற்சி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்தும் தலைமறைவானான். பாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளான்.












Click it and Unblock the Notifications