காங்கிரஸுடன் கூட்டணியா?: பொறுத்திருந்து பார்ப்போம்- ஜெ.

ஜெயலலிதாவின் டெல்லி பயணம், சோனியாவுடன் அவர் சந்தித்த சில நிமிடங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கணக்குகளைப் போட ஆரம்பித்துள்ளன.
இது சாதாரண சந்திப்புதான், விசேஷம் இல்லை என்று தங்கபாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். இதையே முதல்வர் கருணாநிதியும் தெரிவித்தார். பத்திரிக்கைகள் இட்டுக் கட்டிக் கூறக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு ஜெயலலிதா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் காங்கிரஸுடன் கூட்டணி வரலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸுடன் கூட்டணி வருமா என்ற கேள்விக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில், எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக மக்கள் நல்லாட்சியை விரம்பினால், அது அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
திமுகவுடன் சில காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியுடன் உள்ளனர். மக்களும் கூட திமுக மீது எரிச்சலைடந்துள்ளனர். திமுக ஆட்சி மீதான பொறுமையை மக்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
இருப்பினும் எந்த முடிவாக இருந்தாலும் அதை காங்கிரஸ் தலைமைதான் எடுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறித்து கருத்து கேட்டபோது நேரடியாக விமர்சிக்க ஜெயலலிதா மறுத்து விட்டார். மாறாக, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்புக்கு சீனா பெரும் மிரட்டலாக விளங்குகிறது.
மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாமல் அரசு திணரி வருகிறது என்றார் ஜெயலலிதா.
தமிழகம் குறித்து அவர் கூறியபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரும் பிரச்சினையாகியுள்ளது. நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. திமுக அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து இலவசத் திட்டங்களும் சமூக மாற்றத்திற்கு எந்த வகையிலும் பலன் அளிக்கவில்லை. சமுதாயத்திற்கு இவற்றால் எந்தப் பயனும் இல்லை என்றார் ஜெயலலிதா.
கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கண்ட தோல்வி குறித்து ஜெயலலிதா பதிலளிக்கையில், அந்தத் தேர்தல் அரசு இயந்திரத்தின் துணையுடன் நடந்த மோசடித் தேர்தல் என்றார் ஜெயலலிதா.
அதேபோல அதிமுகவிலிருந்து பலரும் வெளியேறிக் கொண்டிருப்பது கேட்டபோது, அது குறித்து தான் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார் ஜெயலலிதா.
வரவிருக்கிற தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் குறித்து ஜெயலலிதா கருத்து தெரிவிக்கையில், அனைத்துக் கட்சிகளுக்கும் நடுநிலையுடன் கூடிய அணுகுமுறையை தேர்தல் ஆணையம் கையாள வேண்டும். எந்தக் கட்சிக்கு சார்பாகவும் தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது. அதுபோன்ற சூழல் உருவாக அனுமதிக்கக் கூாது.
மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். மேலும் குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து போலீஸ் படையினரை இங்கு கொண்டு வந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
சட்டசபைத் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடந்தால் நிச்சயம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications