பொன்சேகாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் - கோத்தபயா

இதுகுறித்து சிங்கப்பூர் பத்திரிக்கை ஒன்றுக்கு கோத்தபயா அளித்துள்ள பேட்டியில், நாட்டில் ராணுவ ஆட்சியை கொண்டு வரத் திட்டமிட்டிருந்தார் பொன்சேகா. அவர் அதிபர் தேர்தலில் நிற்க அமெரிக்காவும், நார்வேயும் தீவிர ஆதரவு தெரிவித்திருந்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெல்ல பொன்சேகா முக்கியப் பங்காற்றினார் என்பது சுத்தப் பொய். இவர் இல்லாவிட்டால் இன்னொருவரை வைத்து நாங்கள் வென்றிருப்போம். இவரை விட திறமையான அதிகாரிகள் எங்களிடம் உள்ளனர்.
ராணுவச் சட்டத்தின்படி பொன்சேகா விசாரிக்கப்படுவார். ராணுவத்தை விட்டு விலகிய ஆறு மாதங்களுக்குள் ஒரு அதிகாரி மீது குற்றம் சாட்ட்பட்டால் அவரை ராணுவச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியும்.
விரைவில் ராணுவ கோர்ட் விசாரணை தொடங்கும். அதற்கு முன்பு அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி விடுவோம். இந்த விசாரணை எவ்வளவு காலம் நடைபெறும் என்று எனக்குத் தெரியாது. அது வக்கீல்களைப் பொறுத்தது. இருப்பினும் இதை விரைவாக முடிக்க விரும்புகிறோம். ஆறு மாதங்களுக்குள் முடியலாம்.
பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. எனவே அவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
கூட்டுப் படைத் தலைவராக இருந்தபோதே, அரசியல் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார் பொன்சேகா. அது முற்றிலும் சட்டவிரோதமாகும். இது தேச துரோக செயலும் ஆகும்.
ராணுவ ஆட்டிக்காக அவர் திட்டமிட்டு வந்தார். ஜனநாயக முறைப்படியான அரசியலை ஒதுக்கி விட்டு சர்வாதிகார ஆட்சிக்கு அவர் திட்டமிட்டு வந்தார்.
ராணுவத் தளபதியாக இருந்த கடைசிக் காலத்தில், தனக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகளையும், படைப் பிரிவினரையும் கொழும்புக்குக் கொண்டு வந்து வைத்தார். அவர் ராணுவப் புரட்சிக்குத் திட்டமிட்டதையே இது காட்டுகிறது.
சில மேற்கக்திய நாடுகளும் பொன்சேகாவுக்கு உடந்தையாக இருந்தன. உள்நோக்கத்துடன் அவை பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுத்து வந்தன. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுகள் பொன்சேகா பிரசாரத்துக்காக பெருமளவில் பணமும் கொடுத்து உதவியுள்ளன.
அரசுக்கு எதிராக எழுதுமாறு கூறி பல பத்திரிக்கையாளர்களுக்கு நார்வே அரசு பணம் கொடுத்தற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பல்வேறு வழிகளில் இலங்கையை நிர்மூலமாக்கவும், புலிகளுக்கு உதவவும் நார்வே முயன்று வந்தது. அதேபோலத்தான் பொன்சேகாவையும் அவர்கள் ஆதரித்தனர்.
சிங்களப் பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரமதுங்கே கொலையிலும் கூட பொன்சேகாவுக்குத் தொடர்பு உள்ளது சூழ்நிலைகளைப் பார்த்தால் அது புரியும். லசந்தா, பொன்சேகாவை விமர்சித்தவர். என்னையோ அல்லது அதிபரையோ விமர்சித்த எந்தப் பத்திரிக்கையாளருக்கும் எதுவும் ஆகவில்லை.
லசந்தாவைக் கொல்ல யாரை பொன்சேகா பயன்படுத்தினார் என்பது குறித்து துப்பு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் 6 பத்திரிக்கையாளர்கள் காணாமல் போன விவகாரத்திலும் கூட பொன்சேகாவுக்குத் தொடர்பு உள்ளதாக நான் அறிகிறேன். விரைவில் உண்மை வெளி வரும் என்றார் கோத்தபயா.
ராஜபக்சேவுடன் பான் கி மூன் பேச்சு..
இதற்கிடையே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ராஜபக்சேவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
பொன்சேகா கைது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் பொன்சேகாவை கவுரமாக நடத்த வேண்டும். சட்டப்படியான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அவருடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ராஜபக்சே வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
இலங்கை நிலைமை குறித்து நேரில் அறிய ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர் லியன் போஸ்கோவை இலங்கைக்கு விரைவில் அனுப்பி வைக்க இருப்பதாகவும் பான் கீ மூன் தெரிவித்தார்.
பொன்சேகாவிடம் முப்படை விசாரணை...
இந்த நிலையில் பொன்சேகாவை முப்பைடயினர் அடங்கிய குழு ஒன்று விசாரிக்கவுள்ளதாம். இதற்காக 5 பேர் கொண்ட குழுவை அரசு நியமிக்க உள்ளதாகவும் இலங்கை செய்திகள் கூறுகின்றன.
மருமகனுக்கு தடை...
இதேபோல, பொன்சேகாவி்ன் மருமகன் திலகரத்னா நாட்டை விட்டு வெளியேறவும் இலங்கை அரசு தடை விதித்து விட்டது.
இவர் மீது ஆயுத கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இவரையும் தூக்கி விரைவில் உள்ளே போடுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications