கேரளாவின் பாறை ஆய்வுப் பணியை தமிழக அரசு எதிர்க்க பாஜக வலியுறுத்தல்
சென்னை: புதிய அணை கட்டுவது தொடர்பாக, பாறை ஆய்வில் இறங்கியுள்ள கேரள அரசின் நடவடிக்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரள அரசு முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மறுபடியும் நீதிக்கு மாறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் நடக்க ஆரம்பித்துள்ளது. புதிய அணைக்கு ஆயத்தமாக நேற்று மண் பரிசோதனை, பாறை பரிசோதனை மற்றும் ஆய்வு பணிகளை மிகப்பெரிய எந்திரங்களை கொண்டு, துளையிடும் பணியை தொடங்கியுள்ளது.
இப்பணிக்காக, அப்பகுதியில் ஏராளமான மரங்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. இது கேரளத்தின் சுற்றுசூழலை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் சுற்றுச்சூழலையும் பாதிக்கும். இப்பணி ஒரு வாரம் நடைபெறும் என்றும் கேள்விப்படுகிறோம்.
ஆளும் அரசுகள் இந்த ஆய்வுப்பணிக்கு உடனே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், முதல்வர் கருணாநிதி உடனடியாக தலையிட்டு கேரள அரசின் அணைகட்டும் இப்பணியை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications