ரோந்து போலீஸ் வாகனங்களில் லஞ்ச ஒழிப்பு ரெய்ட்: லஞ்சப் பணம் பறிமுதல்!
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனங்களை மடக்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
போக்குவரத்து போலீசார் சாலைகளில் வரும் வாகனங்களை மடக்கி முறைகேடாக பணம் பறிப்பதும், அபராத பணத்துக்கு உரிய ரசீதுகள் தருவதும், பலர் போலி ரசீதுகளை பயன்படுத்துவதும் அன்றாட வாடிக்கையாக இருந்துவருகிறது.
குற்றப்பிரிவு போலீசார் அனுமதி பெறாத நடைபாதை கடைக்காரர்களிடம் மாமூல் வசூல் வேட்டை நடத்துவதும், பஸ்நிலையம் முதல் ஹோட்டல்கள் வரை பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதும் பல இடங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீரென மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது, எஸ்.ஐ, ஏட்டு உள்ளிட்ட போலீசார், தங்களின் பணிக்கு தொடர்பில்லாத வகையில் ஏராளமான ரொக்கப் பணம் வைத்திருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் இருந்து பணம் மற்றும் இதர ஆவணங்களை லஞ்ச ஒழிப்புப் போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications