தெலுங்கானா கமிட்டிக்கு பணி ஒதுக்கீடு - டிச. 31க்குள் அறிக்கை அளிக்கும்
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பான ஆய்வுக்காக மத்திய அரசு அமைத்துள்ள ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஐந்து பேர் கமிட்டியின் பணிகள் குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கமிட்டிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 7 அம்சங்கள் குறித்து இந்தக் கமிட்டி விசாரணை மற்றும் ஆய்வு நடத்தும்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான இந்த கமிட்டியில், உறுப்பினர்களாக ரன்பீர் சிங், அபுசலே ஷெரீப், ரவீந்தர் கெளர், முன்னாள் உள்துறைச் செயலாளர் வினோத் துகல் ஆகியோர் உள்ளனர்.
இந்தக் கமிட்டி செய்ய வேண்டியவை...
- தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை மற்றும் தற்போது ஆந்திரப் பிரதேச மாநிலம் அப்படியே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த விரிவான ஆய்வு.
- ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் அதன் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வு.
-, மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், சிறுபான்மையினர், பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் உள்ளிட்ட சமூக அமைப்பினர் அடைந்துள்ள வளர்ச்சிகள் குறித்த ஆய்வு.
- அனைத்து அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் ஆகியோரிடம் புதிய மாநிலம் தொடர்பாகவும், தற்போதுள்ள மாநில அமைப்பு தொடர்பாகவும் விரிவான ஆலோசனைகள்.
- பிரச்சினைக்குரிய தீர்வுகள், அதை எப்படி செயல்படுத்துவது என்ற திட்டமிடல் உள்ளிட்டவை குறித்த பரிந்துரை.
- தொழில்துறையினர், தொழிற்சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்துறையினரின் கருத்துக்களைப் பெறுவது ஆகியவை குறித்து இந்தக் கமிட்டி ஆலோசனைகளை நடத்தி, ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரையை சமர்ப்பிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications