என்னுடன் சாவ்லா பேசினார் என்பதற்காக அவரையே மிரட்டுகிறார் கருணாநிதி - ஜெ.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா எனக்கு ஆதரவாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு தன்னிடம் சம்பளம் பெறும் அதிகாரி என்று கூறி அவரை வசைமாரி பொழிந்தார். கருணாநிதி.
தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சாவ்லாவையே பெயர் சொல்லி மிரட்டும் அளவுக்கு வந்து விட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்திய தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
இந்த அமைப்பின் தலைமை ஆணையரை மிரட்டும் வகையில் கருணாநிதி அறிக்கை விடுவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரான செயல் ஆகும். நவீன் சாவ்லா எனக்கு ஏதோ சாதகமாக நடந்து கொண்டு விட்டார் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயலுகிறார் கருணாநிதி. எந்தவிதமான உண்மையும் கிடையாது.
முதலில் கேட்டவர் ராமதாஸ்தான்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று முதலில் கேட்டது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். பின்னர் அ.தி.மு.க. சார்பிலும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இதுகுறித்து விவாதித்தது.
இந்த கூட்டத்தில் தி.மு.க.வைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. அனைத்து கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஜனநாயக முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ஒத்திவைத்தது.
இதன் பின்னர் பென்னாகரம் தொகுதி வாக்காளர் பட்டியலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டு விட்டதாக பல்வேறு கட்சிகளிடம் இருந்தும், அத்தொகுதியில் உள்ள பொது மக்களிடம் இருந்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
பொது மக்களின் புகார்களை ஏற்று வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை இந்திய தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்ததோடு நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதற்கும் அ.தி.மு.க. விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனது சார்பில் எந்த விதமான புகாரும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்படவில்லை. உண்மை நிலைமை இவ்வாறிருக்க நவீன் சாவ்லா எனக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் மக்களைப் பொதுத்தேர்தல் ஆகிய ஜனநாயக முறைப்படி நியாயமாக வும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது பல முறை நான் குற்றம் சாட்டி இருந்தேன்.
இந்த சூழ்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் எனக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்று சொல்வதில் சிறிதளவும் உண்மையில்லை.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா எனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். இது தான் கருணாநிதிக்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த அழைப்பு எனக்கு மட்டும் விடுக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு தொலைபேசி மூலம் தலைமை தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
கருணாநிதி பேச மறுத்தார்...
எனக்கு தொலை பேசியில் அழைப்பு விடுவதற்கு முன்பே கருணாநிதியையும், தொலைபேசியில் நவீன் சாவ்லா தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவருடன் பேச கருணாநிதி மறுத்து விட்டார். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நவீன் சாவ்லாவுடன் பேச அவரால் இவ்விழாவிற்காக டெல்லி வர முடியாது என்று பதில் கூறி விட்டதாக தெரிகிறது.
இது தான் உண்மை நிலைமை. நவீன் சாவ்லா என்னுடன் தொலைபேசியில் பேசிவிட்டார் என்ற கோபத்தில் தான் கருணாநிதி அவரையே மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரையில் அனைத்து கட்சிகளும் ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு சுதந்திரமான அமைப்பின் தலைவரை மிரட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications