புதிய சட்டசபைக் கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: புதிய சட்டசபை கட்டிடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபை கட்டடம், தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
சட்டசபைக் கட்டட கட்டுமானப் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிகள் முடியும் நிலையை எட்டிக் கொண்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி அடிக்கடி நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் திறப்பு விழாவுக்கு வரவுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கோவையில் உள்ள வேளாண் பல்கலைகழக அதிகாரிக்கு மிரட்டல் போன் வந்தது.
அதில் சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சட்டசபை கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் வெடிக்கும் என அந்த மர்ம நபர் கூறினார்.
இதையடுத்து சென்னை போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்தனர்.
மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.
இருப்பினும் இதில் எந்த குண்டும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டுத் தகவல் புரளி எனத் தெரிய வந்தது.
இருப்பினும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் பல இடங்களுக்கும் மிரட்டல்...
இந் நிலையில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அலுவலத்திற்கு நேற்று மர்ம டெலிபோனில் பேசிய நபர், பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது 12ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வெடிக்கும் என்று கூறிவிட்டு வைத்து விட்டார்.
இதையடுத்து போலீஸார் சோதனை நடத்தினர். அது வெறும் மிரட்டல் என்று தெரியவந்தது. இருப்பினும் பல்கலைக்கழகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் கோவை மண்டலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து ஐ.டி.ஐகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications