விவசாயிகள் சிந்தும் ரத்தக் கண்ணீருக்கு கருணாநிதி பதில் சொல்லியே ஆக வேண்டும்- ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கரும்பு விவசாயிகள் சிந்தி வரும் ரத்தக் கண்ணீருக்கு கருணாநிதி பதில சொல்லியே ஆக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

விழுப்புரத்தில், கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலையை டன்னுக்கு ரூ. 2500 தர வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ராகு காலம் கழிந்த பின்னர் மேடைக்கு வந்தார் ஜெயலலிதா.

பின்னர் ஐந்து நிமிடம் ஜெயலலிதா தலைமையில் திமுக அரசைக் கண்டித்து கோஷம் போடப்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதா பேசினார்.

அவர் பேசுகையில், கரும்பு விவசாயிகள் வாழ்க்கையை திமுக அரசு பழிவாங்குகிறது. கரும்பு விவசாயிகளின் ரத்தக் கண்ணீருக்கு கருணாநிதி பதில் சொல்லியே தீர வேண்டும்.

கரும்பு சாகுபடி தமிழகத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. திமுக ஆட்சியில் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

செவிடன் காதில் சங்கு ஊதிய கதை:

கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றியும், கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், திமுக அரசுக்கு பலமுறை எடுத்துரைக்கப்பட்டும், அண்மையில் ஜனவரி 11ம் தேதியன்று சட்டமன்ற பேரவையில், நானே இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசியும், செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தாத திமுக அரசைக் கண்டித்தும்; உடனடியாக கரும்புக்கான ஆதார விலையாக டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 2,500 வழங்க வலியுறுத்தியும்; வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதிமுகவினருடன் திமுக மோதல்:

முன்னதாக விழுப்புரம் பஸ் நிலையப் பகுதியில் அதிமுகவினரின் போராட்டம் தேவையா என்று கூறி துண்டு நோட்டீஸ்களை திமுகவினர் விநியோகித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இன்று காலையில் திமுகவினர் துண்டு நோட்டீஸ் விநியோகித்தனர். அதில் திமுக ஆட்சியில் தான் கரும்புக்கு ஆதரவு விலை அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதிமுக தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையா என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆத்திரமடைந்த அதிமுகவினர் அவற்றை வாங்கிக் கிழித்தெறிந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. விரைந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.

ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

முன்னாக போராட்டம் குறித்து ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கை:

இனிக்கும் கரும்பைத் தரும் விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய விலையை தி.மு.க. அரசு தர மறுப்பதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், கரும்பு சாகுபடியே தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகியுள்ளது.

இதன் விளைவாக, சாமான்ய மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு சர்க்கரையின் விலை விஷம்போல் உயர்ந்து கொண்டே போகிறது.

2005-06ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ஆதார விலையாக மத்திய அரசு அறிவித்த 795 ரூபாயுடன், மாநில அரசின் ஆதார விலையான 219 ரூபாயையும் சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 1,014 வழங்க நான் உத்தரவிட்டேன். இது தவிர, வாகன வாடகையை அந்தந்த ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதன் முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் எனது ஆட்சிக் காலத்தில்தான்.

எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, வெளிச்சந்தையில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ. 12.50 முதல் ரூ. 14 வரை விற்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், எனது ஆட்சியில் ஒரு கட்டத்தில் நியாய விலைக்கடைகளில் விற்கப்படுவதை விட வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை குறைவாக இருந்தது.

எனது ஆட்சிக்காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கும், கரும்புத் தொழிலுக்கும், பொது மக்களுக்கும் சாதகமாக இருந்த நிலைமையை, திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிவடைவதற்குள் பாதகமாக மாற்றிக் காட்டியதுதான் சாதனை.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு கரும்பிற்கான ஆதார விலையை ரூ. 503.40 என்ற அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. ஆனால், திமுக அரசோ 80 ரூபாய் அளவிற்கு மாநில அரசின் ஆதார விலையை குறைத்து இருக்கிறது.

2005-06ம் ஆண்டில் 21.38 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, 2008-09ம் ஆண்டு 16.16 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்திருப்பது கரும்பு விவசாயிகளின் மனநிலையை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

மேலும், தற்போதைய திமுக ஆட்சியில் சர்க்கரை விலை ஒரு கிலோ 44 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

எனது ஆட்சிக் காலத்தில், ஒரு குவிண்டால் சர்க்கரை 1,250 ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டபோது, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,014 வழங்கப்பட்டது. ஒரு குவிண்டால் சர்க்கரை விலை 4,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் தற்போதைய சூழ்நிலையில், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 1,437.40 என்று திமுக அரசு அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களின் விவசாய விரோத போக்கையே காட்டுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,100 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கரும்புக்கு கூடுதல் ஆதார விலை தரப்படுகிறது. வட மாநிலங்களில் உள்ள தனியார் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,250 வரை அளிக்கின்றன. தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கூட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,800 வரை தருகின்றன.

அதே சமயத்தில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1,437.40 தான் தரப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளை விட, தனியார் சர்க்கரை ஆலைகள் கூடுதல் விலை கொடுக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கரும்புக்கான ஆதார விலையை உயர்த்த கருணாநிதி மறுப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றியும், கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், திமுக அரசுக்கு பலமுறை எடுத்துரைக்கப்பட்டும், அண்மையில் ஜனவரி 11ம் தேதி அன்று சட்டமன்ற பேரவையில், நானே இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசியும், செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகிவிட்டது என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+