திராவிட கொடிகளின் சிவப்பு நிறத்தில் எனது ரத்தம்- கருணாநிதி

சங்கத் தமிழ்ப் பேரவை சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நன்றிப் பெருவிழா-நற்றமிழ்த் திருவிழா என்ற நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றிப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது முதல் இதுவரையிலே நடந்த விழாக்களில் இது தலைசிறந்த விழா என்பதை நான் கூற விரும்புகிறேன்.
இந்த விழாவில் நான் காலையிலிருந்து இதுவரையிலே நீண்ட நேரம் தொடர்ந்து கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் கடந்த ஆண்டு இந்த விழாவில் நான் பெற்ற பாடம் எனக்கு நினைவு இருப்பது மாத்திரமல்ல, என்னை அச்சுறுத்திக் கொண்டும் இருக்கிறது.
இதே நாளில் கடந்த ஆண்டு ஏறத்தாழ பத்து மணி நேரத்திற்கு மேலாக - ஜெகத்ரட்சகனும், துரைமுருகனும் நடத்திய அந்த விழாவிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்ணுற்று - அன்றிரவே முதுகெலும்பு நோயினால் தாக்குண்டு அறுவை சிகிச்சை முடிந்து சரியாக இன்றைக்கு ஓராண்டு காலம் ஆகிறது.
யாராவது நினைப்பார்களா? மீண்டும் இந்த விழாவிலே கலந்துகொண்டு இவ்வளவு நேரம் செலவழிக்கலாம் என்று யாராவது நினைப்பார்களா? என்னை தவிர வேறு யாருக்காவது இந்த துணிவு ஏற்படுமா என்றால், எனக்கு ஏற்பட்ட துணிவுக்கு காரணமே, இங்கே தமிழைப் பருகலாம் - தமிழ்ச் சுவையை அருந்தலாம் என்ற அந்த நம்பிக்கையோடு தான் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் - மாலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னை நான் ஈடுபடுத்திக்கொண்டு உங்களோடு ஒருவனாக இருக்கின்ற அந்த பெரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
துரைமுருகனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டதாக இங்கே ரஜினியே சொன்னார்கள். உங்களைப் பார்த்தால் ஒரு மாதிரியாக தெரிகிறதே, சாப்பிடுவீர்களா? என்ன "பிராண்ட்''? பிளாக் லேபிளா? ரெட் லேபிளா? என்றெல்லாம் கேட்டதாக இங்கே சொன்னார்.
துரைமுருகன் அவருக்கு சொல்லியிருக்க வேண்டிய பதில் எனக்கு தெரியும். "ரெட் அண்ட் பிளாக்'' தான் எனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருக்க வேண்டும். இங்கே கூடியிருக்கின்ற பலருக்கு இது புரியும். "நான் மாத்திரமல்ல - எங்கள் தலைவரே விரும்புவது "ரெட் அண்ட் பிளாக்'' தான் என்று துரைமுருகன் தைரியமாகச் சொல்லியிருக்க வேண்டும்.
அதற்காக ரஜினிகாந்த் ஒன்றும் வருத்தப்படமாட்டார். ஏனென்றால் அவர் கேட்டதற்கு நாம் சொல்லுகின்ற சரியான பதில் அது தான். உண்மையான பதில் அது தான். அந்த பதிலை நான் இங்கே விவரிப்பதற்கு காரணம் இன்றைக்கு தமிழ்நாட்டில் "ரெட் அண்ட் ப்ளாக்'' - கொடியானாலும், சின்னமானாலும் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது அறுபதாண்டு காலமாக மக்களுடைய மனதிலே பதிந்துவிட்ட ஒன்றாகும்.
இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்கத்தின் கொடி - சிவப்பு, கறுப்பாக இன்றைக்கு அமைந்திருப்பதற்கு காரணம் - பெரியாரின் திராவிடர் கழகத்தின் கொடியே - கறுப்பு சிவப்பாக அமைந்தது. நடுவிலே வட்டமான சிவப்பும், சுற்றிலும் கறுப்பும் திராவிடர் கழகத்தின் கொடி. இந்த கொடி பரவாயில்லையா என்று பெரியார் கேட்டு - படம் வரைந்து - அவருடைய அலுவலகத்திலே பணிபுரிந்து கொண்டிருந்த எங்களைப் போன்றவர்களையெல்லாம் கேட்டபோது - "நாங்கள் நன்றாக இருக்கிறது, இதையே ஏற்றுக் கொள்ளலாம்'' என்று அவரிடத்திலே சொன்னோம். அப்படி ஒப்புதல் வழங்கிய போது நேரம் இரவு மணி 2.
அதற்கு பிறகு அதைச் சித்திரமாக வரைவதற்கு - ஓவியர் யாரும் இல்லை. எப்படி கறுப்பையும், சிவப்பையும் வரைந்து காட்டி காலையிலே அய்யாவிடத்திலே சென்று ஒப்புதல் பெறுவது என்று யோசித்த போது தான் - நான் சிவப்பு வண்ணத்திற்காக தேடித் தேடி - அந்த அலுவலகத்தில் அந்த நேரத்தில் சிவப்பு வண்ணம் கிடைக்காமல் - சிவப்பு வண்ணம் இருந்த மேஜையை மேலாளர் அரிவரத சாமி பூட்டிக் கொண்டு போய்விடவே - என்ன செய்வதென்று கேட்ட போது - பயப்பட வேண்டாம், ஒரு ஊசி கொடுங்கள் என்று கேட்டு - ஒரு ஊசியால் என்னுடைய விரலை குத்தி, அதிலேயிருந்து ரத்தத்தை எடுத்து சிவப்பு வண்ணத்திற்கு பதிலாக கொடுத்து அந்த கொடியை அன்றைக்கு உருவாக்கினோம்.
அதனுடைய விரிவாக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி. இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற "திராவிட'' என்கிற சொல்லை சேர்த்துக் கொண்டிருக்கின்ற எந்த கட்சியின் கொடியிலும் - காணப்படுகின்ற சிவப்பு இருக்கிறதே, அது என்னுடைய ரத்தம் தான் என்பதை அவர்களுக்கெல்லாம் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
அதனால் தான் துரைமுருகனுக்கு சிலர் மீது வந்த கோபத்தைப் போல எனக்கு கோபம் வரவில்லை. அவர் சொன்னார் - இந்த விழாவை நாங்கள் நடத்துவதற்கு காரணமே - இதைப் பார்த்து வயிற்றெரிச்சல்காரர்கள் மேலும் வயிற்றெரிச்சல் படட்டும் என்று சொன்னார். வயிறு மட்டுமே இருப்பவர்கள் எரிச்சல் கொள்வதிலே தவறு இல்லை. இதை துரைமுருகன் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. மனம் இருந்தால் மன எரிச்சல் - நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிறு மாத்திரம் இருப்பவர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என்றால், அதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
ஒரு பாராட்டு விழா நடத்துகிறீர்கள் என்றால் என்னை தூக்கி இன்னொரு சிம்மாசனத்திலே வைப்பதற்காக அல்ல. நான் இதுவரையில் ஆற்றிய பணியை மேலும் ஆக்கப்பூர்வமாக, பரவலாக மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் உறுதியாக நாம் நடைமுறைப்படுத்துவதற்காக இந்த பாராட்டு விழாவே தவிர, இந்த பாராட்டு விழாவை நடத்தி "நீ ஆக்கிய, நீ செய்த நற்செயல்களுக்கெல்லாம் நாங்கள் இந்த பரிசை அளித்து விட்டோம்'' என்று என்னை ஓய்வெடுக்கச் சொல்வதற்காக அல்ல. ஓய்வெடுத்துக் கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதை நான் எந்த தேதியிலே, எப்போது, எந்த சூழ்நிலையிலே அறிவிப்பேன் என்பது வேறு விவகாரம்.
ஆனால் தமிழ்நாட்டில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற உணர்வுகளை - எண்ணங்களை நான் கடந்த 1967-ம் ஆண்டிலிருந்து அண்ணாவின் தலைமையிலே நான் ஆற்றிய பணியானாலும், அவர் இந்த நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயரிட்டாரே, அந்த நிலையானாலும் - அவர் சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக ஆக்கித் தந்தாரே, அந்த நிகழ்வானாலும் - அவருக்கு பிறகு அவருடைய கொள்கையிலே தொடர்ந்து அவருடைய லட்சியங்களைத் தொடர்ந்து சிந்தாமல், சிதறாமல் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்'' என்ற அந்த உறுதியோடு நாம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த பயணத்தில் இன்னும் வேகம் வேண்டும், இன்னும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் வேண்டும், இன்னும் பரவலாக நம்முடைய பணி தொடர வேண்டும் என்று என்னை உசுப்பிவிடுவதற்காகத் தான் இந்த பாராட்டு விழா என்று நான் கருதுகிறேனேயல்லாமல் நான் இதுவரையிலே புரிந்துள்ள சாதனைகள், போதும் போதும் என்று அறிவிப்பதற்காக அல்ல.
இவைகளை மேலும் தொடர வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை நான் மிகமிக நன்றாக உணருகின்றேன். எனக்கு தம்பியுடையான் என்ற படை வரிசையிலே ஒருவராக இருக்கின்ற ஜெகத் ஆனாலும், அதைப் போலவே துரைமுருகன் ஆனாலும் படாதபாடுபட்டு - பகல் இரவு பாராமல் இந்த மண்டபத்தை இந்த அளவிற்கு ஜோடித்து - அவர்களுடைய ஜோடனை சரியாக இருக்கிறதா என்று நான் முதல் நாளே வந்து பார்க்க வேண்டுமென்று என்னை நேற்றிரவு அழைத்து வந்து - இந்த அலங்காரங்களையெல்லாம் காட்டி மகிழ்ந்தார்களே என்ன காரணம்? அண்ணனுக்கு இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவா? அல்ல.
இந்த மகிழ்ச்சியால் மேலும் அவர் இயக்கப் பணிகளில் தொடர்ந்து வேகமாக நடைபோட வேண்டும், விறுவிறுப்பாக நடைபோட வேண்டும் என்பதற்காகத் தான் என்று நான் கருதுகிறேன். அதே நேரத்தில் நான் மாத்திரம் இந்த இயக்கத்திலே வேகமாக - விறுவிறுப்பாக நடை போட்டால் போதாது.
இந்த இயக்கத்திலே இருக்கிற முன்னோடிகள் அனைவரும் நம்முடைய தளபதிகள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கின்ற அமைச்சர்களானாலும், பாராளுமன்ற உறுப்பினர்களானாலும், பேரவை உறுப்பினர்கள் ஆனாலும் அவர்கள் எல்லாம் அத்தகைய ஒழுங்கு முறையோடு உறுதியோடு இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க வேண்டும். இது தான் நம்முடைய உயிர் மூச்சு என்ற அந்த ஆர்வத்தோடு நடைபோட வேண்டும்.
தொடர்ந்து நடைபோடுவோம் - இன்னும் வேகமாக நடைபோடுவோம் - விவேகமாக நடைபோடுவோம் - கண்ணியத்தோடு நடை போடுவோம் - கடமையை மறக்காமல் நடை போடுவோம் - என்று உங்களையெல்லாம் என்னோடு சேர்த்து அழைத்துக்கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்கிறேன் என்று கூறி அந்த பயணத்திற்கு துணையாக மேடையிலே இருக்கின்ற சூப்பர் ஸ்டார் ஆனாலும் - கலைஞானி ஆனாலும் - மற்ற கலைஞர்கள் ஆனாலும் - எதிரே இருக்கின்ற நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications