வரதராஜன் ஓய்வு பெற்றார் - தமிழ் மாநில சிபிஎம் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்வு
சென்னை: உடல் நலக் குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து என்.வரதராஜன் ஓய்வு பெற்றுக் கொண்டார். இதையடுத்து புதிய செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் கடந்த 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை தாங்கினார். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். சங்கரய்யா, டி.கே.ரங்கராஜன், ஏ.கே.பத்மநாபன், ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும், மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கட்சியின் அகில இந்திய முடிவின் அடிப்படையில், மாநிலக்குழுவின் அரசியல் ஸ்தாபன பணிகள் குறித்து இடைக்கால பரிசீலனை அறிக்கையை மாநிலக்குழு விவாதித்து ஏற்றுக் கொண்டது.
கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கும் என். வரதராஜன் உடல் நலம் மற்றும் வயதுப் பிரச்சினைகள் காரணமாக தொடர்ந்து செயலாற்றுவதில் சிரமம் ஏற்படுவதால் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென மாநிலக் குழுவை கேட்டுக் கொண்டார்.
என்.வரதராஜனை மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்க மாநிலக்குழு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மத்தியக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். வயது 60. சென்னையில் பட்டப்படிப்பு படிக்கும் போதே மாணவர் சங்கத்தில் சேர்ந்து 1969-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினரானார். சென்னையில் சட்டப்படிப்பை முடித்து கடலூரில் 8 ஆண்டுகாலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்ஆற்காடு மாவட்டச் செயலாளராகவும், அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1981-ம் ஆண்டு முதல் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தென்ஆற்காடு மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். நெய்வேலி சி.ஐ.டி.யு. சங்கத்தின் கவுரவ தலைவராக செயல்பட்டு வருகிறார்.
1989-ஆம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2008-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கட்சியின் 19-வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications