இனி எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டேன்: எஸ்எம்கிருஷ்ணா
சென்னை: இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான எஸ்எம் கிருஷ்ணா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர்.
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்த பின் அரசியலில் நுழைந்து, கர்நாடக முதல்வராகவும், மஹாராஷ்டிரா ஆளுநராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகா சட்டசபைத் தேர்தலின் போதே போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த எஸ்.எம்.கிருஷ்ணா தற்போது ராஜ்யசபா மூலமாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ராஜாஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.எம்.கிருஷ்ணா,
'இன்றைய அரசியல் சூழலில் பண பலமும், ஆள் பலமும் இருந்தால் எந்த ஒரு காரியத்தையும் முடித்துவிடலாம் என்ற நிலை உள்ளது.
அதிகாரத்தை பெறுவதற்காக பணத்தையும், படையையும் எல்லோரும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது' என்று விரக்தியுடன் குறிப்பிட்டவர், 'இனி வரும் தேர்தலில் நான் போட்டியிடுவதாக இல்லை' என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications