அவை கூடுகிறது: என்ன செய்யப்போகிறார் அழகிரி?

இந்த கூட்டத்தொடரிலும் அழகிரி ஆப்சென்ட் ஆனால் மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்படும் என டெல்லி வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. குறிப்பாக அவரது ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான கேள்வி நேரத்தின்போது அவர் அவையி்ல் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மத்திய அமைச்சர் அவைக்கு வராமல் தவிர்ப்பதை எதிர்க்கட்சிகள் பெரிய பிரச்சனையாக்குவது ஆளும் காங்கிரசுக்கு தலைவலியாக இருந்து வருகிறது.
கேள்வி நேரங்களில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய மத்திய அமைச்சர் தொடர்ந்து அவையில் இல்லாமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மத்திய அமைச்சருக்கு பதிலாக ஒவ்வொரு முறையும் அத்துறையின் இணையமைச்சரான ஸ்ரீகாந்த் ஜெனா தான் பதில்களை அளித்து வருகிறார்.
அமைச்சர் அழகிரி ஆங்கிலத்தில் சரளமாக பேச இயலாத காரணத்தால் அவை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.
இதனால், அவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தமிழில் பதில் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அழகிரி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்து சபாநாயகர் மீராக்குமாரை சந்தித்து பேசுவதைக் கூட அழகிரி தவிர்த்து வருவது ஏன் என்று தெரியவில்லை என்று சபாநாயகர் அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர்.
இப்பிரச்சனை குறித்து சபாநாயகர் மீராக்குமார் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிருபர்களிடம் கூறுகையில், 'அமைச்சர் அழகிரி என்னிடம் நேரில் வந்து தனது பிரச்னை குறித்து விவாதிக்கட்டும். அதன்பின் சுமுகமான ஒரு முடிவை எடுக்கலாம். ஆனால் அமைச்சர் அழகிரி இதுவரை இதுதொடர்பாக என்னை வந்து சந்திக்கவே இல்லை' என்று கூறியுள்ளார்.
தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி துவங்குகிறது. இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில் அழகிரி இப்பிரச்சனை தொடர்பாக இன்னும் சபாநாயகரை சந்தித்து பேசாமல் உள்ளார்.
இந்த கூட்டத்தொடரையும் அழகிரி தவிர்த்தால், எதிர்க்கட்சிகள் அமளி செய்வதற்கு இதுவே அருமையான காரணமாக அமைந்துவிடும்.
அது மத்திய அரசுக்கு குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு சமாளிக்க முடியாத தலைவலியாக அமைந்துவிடும்.
அப்படியே அழகிரி சபாநாயகரை சந்தித்தாலும் உடனடியாக தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமே.
நாடாளுமன்ற மரபுப்படி அமைச்சர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் பதில் அளிக்க முடியும். ஏனெனில் பல்வேறு துறைசார்ந்த கோப்புகள் அனைத்தும இந்த இரு மொழிகளில் தான் இருக்கும்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் அழகிரிக்கு ஆதரவாக கருத்து கூறிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் தமிழில் பதில் அளிக்கும் வகையில் 'இன்டர்பிரட்டர்' வசதியை உருவாக்க லோக்சபா செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டும் என யோசனை கூறியிருந்தார்.
இந்நிலையில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைச்சர் அழகிரி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.












Click it and Unblock the Notifications