என்டிடிவிக்கு பேட்டி அளிக்க நளினி மறுப்பு
சென்னை: நான் எந்த தனியார் தொலைக்காட்சிக்கும் பேட்டி அளிக்க அனுமதி தரவில்லை. எனது மகளுடன் வாழவே நான் ஆசைப்படுகிறேன். வேறு எந்த எண்ணமும் என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார் நளினி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைபட்டுள்ள நளினி விடுதலைக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், என்டிடிவி நிறுவனம் சார்பில், நளினியைப் பேட்டி காண விரும்பி வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் அதன் முதுநிலை செய்தியாளர் சாம் டேணியல் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை சிறைக் கண்காணிப்பாளர் நிராகரித்து விட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம் டேணியல் மனு செய்தார். அதில், நளினியின் பேட்டியைப் பெறுவற்கு தங்களுக்கு அனுமதி தரப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த நிலையில் நளினி தனது வக்கீல் ராதாகிருஷ்ணனுக்கு ஒரு தந்தி அனுப்பியுள்ளார். அதில், என்னைப் பேட்டி காண்பதற்கு நான் எந்த ஒரு மீடியாவுக்கும் ஒப்புதல் தரவில்லை. எனது மகளுடன் வாழ வேண்டும், எனது மகளுக்காக வாழ வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே எண்ணம் என்று அதில் கூறியுள்ளார் நளினி.












Click it and Unblock the Notifications