நில விவகாரம்: நீதிபதி தினகரன் குடும்பத்தாரிடம் சர்வே அதிகாரிகள் விசாரணை
திருத்தணி: திருவள்ளூர் அருகே நீதிபதி தினகரனுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிபதியின் மனைவி மற்றும் சகோதரர்களிடம் நில ஆளவை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரனுக்கு சொந்தமாக 600 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இதில் 447 ஏக்கர் மட்டுமே நீதிபதிக்கு சொந்தமானது. மீதமுள்ள நிலம் அரசு புறம்போக்கும் என்றும், அதை நீதிபதி ஆக்கிரமித்து தோட்டம் அமைத்துள்ளார் என்றும் புகார் எழுந்தது.
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு, கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீட்டு மனைப்பட்டாவாக வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மத்திய நில அளவைத்துறை உயர் அதிகாரி சஞ்சய்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 10 நாட்களாக நீதிபதியின் சர்ச்சைக்குரிய தோட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நில அளவைப் பணிகள் முடிவடையும் நிலையில், நீதிபதி தினகரனின் மனைவி வினோதினி, தம்பி கிஸ்டிவி ஆல்பர்ட் ஆகியோரை அழைத்து அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
விசாரணை மற்றும் நில ஆய்வுப் பணிகளை முடித்த பின் அடுத்த வாரத்தில் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரனுக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டத்தின் காவேரிராஜபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தோட்டத்தில் மத்திய நில அளவைக்குழுவினர் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக ஆய்வு செய்து வந்தனர்.












Click it and Unblock the Notifications