வேலையில் மெத்தனம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
சென்னை: விபத்தில் உயிரிழந்தவரின் பிரதே பரிசோதனை அறிக்கை மற்றும் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அவரின் மனைவிக்கு தராமல் இழுத்தடித்த காவல்துறை ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை துடியலூரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரி்ன் கணவர் பொன்னுசாமி கடந்த 2008ம் ஆண்டில் மேட்டுப்பாளையம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
இவ்விபத்தை துடியலூர் காவல்துறை ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ஆனால், வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை தன்னிடம் தரவில்லை எனக் கூறி சரஸ்வதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விபத்து காப்பீடு பெறுவதற்காக இந்த ஆவணங்களை தனக்கு தர உத்தரவிடுமாறு சரஸ்வதி மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
விபத்தில் கணவரை இழந்து அப்பாவியாய் நிற்கும் பெண்ணுக்கு உரிய நிவாரணம் தருவதில் அதிகாரிகள் மெத்தனமாக நடந்துள்ளனர்.
விபத்து தொடர்பான முக்கிய ஆதாரங்களை ஆர்.சி புக், பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் வழங்காதது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் வரை வரும் அளவுக்கு அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
எனவே விபத்து நடந்தபோது பணியில் இருந்த துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இதனை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். கோவை போலீஸ் சூப்பிரண்டு ஒரு வாரத்துக்குள் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications