தனியார் பள்ளி காப்பகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெளிமாநில சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி காப்பகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
குமரி மாவட்டம் களியாக்கவிளை அருகே உள்ள பாளவிளை சிறுவர் காப்பகத்தில் முறையான வசதிகள் இல்லாமல் தங்க வைக்கப்பட்டிருந்த அசாம், மணிப்பூரை சேர்ந்த 76 சிறுவர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள செட்டிமேடு, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் தனியார் பள்ளி காப்பகங்களில் ஏராளமான வெளிமாநில சிறுவர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை துணை ஆட்சியர் வீரராகவன், தாசில்தார் சிவசங்கரன், மண்டல துணை தாசில்தார் நடராஜன், ஆர்ஐ சண்முக சுப்பிரமணியன், மற்றும் அதிகாரிகள் தனியார் பள்ளி காப்பகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர்.
செட்டிமேட்டில் உள்ள காப்பகத்தில் மணிப்பூரை சேர்ந்த 49 சிறுவர்கள் மற்றும் கேராளவை சேர்ந்தவர்கள் உள்பட 54 வெளிமாநில சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். பள்ளி நி்ர்வாகத்தினர் 2005ம் ஆண்டிற்கு பிறகு காப்பகம் நடத்துவதற்கான அனுமதியை புதுப்பிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் பாப்பாக்குடியில் உள்ள தனியார் பள்ளி காப்பகத்தில் அந்தமானை சேர்ந்த சிறுவர்கள் 64, மணிப்பூர் 24, கேரளா 5, அசாம் 1, திரிபுரா 1 உள்பட 103 வெளிமாநில சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த காப்பக நிர்வாகமும் 2006ம் ஆண்டிற்கு பிறகு உரிமத்தை புதுப்பிக்கவில்லை. வரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் காப்பகம் நடத்துவதற்கான அனுமதியை புதுப்பிக்க வேண்டும் என இரு காப்பக நிர்வாகிகளையும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
